ரயில்வே அதிகாரிகள் இனி தமிழில் பேசக் கூடாது என்ற ரயில்வே துறையின் அறிவிப்புக்கு எதிராக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,”பாரதிய ஜனதா கட்சி மீண்டும் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, ‘இந்து - இந்தி - இந்தியா’ எனும் கோட்பாட்டில் முனைப்பாகச் செயல்படத் தொடங்கி உள்ளது. அதனால்தான் மூர்க்கத்தனமாக இந்தி மொழித் திணிப்பை எல்லா வகையிலும் நடைமுறைப்படுத்தத் தீவிரப்படுத்தி உள்ளது.
மும்மொழிக் கொள்கையைத் திணித்து அதன் மூலம் இந்தியைக் கற்கச் செய்வதற்கு பா.ஜ.க. அரசு புதிய கல்விக் கொள்கை மூலம் சதித்திட்டம் தீட்டுகிறது. தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கைதான் இருக்கும் என்று பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். இதனை மாற்றுவதற்கு பா.ஜ.க. அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிப்பதற்கு தமிழகம் போர்முரசு கொட்டியிருக்கின்ற வேளையில், தென்னக இரயில்வே வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கை, இந்தியை அப்பட்டமாகத் திணிப்பதற்கு வழி செய்துள்ளது.
தென்னக இரயில்வே சார்பில் நேற்று அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் ரயில் நிலைய அதிகாரிகள் தகவல் பரிமாற்றங்களை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில்தான் மேற்கொள்ள வேண்டும். இரயில்வே தொடர்பான பணிகள், ரயில்கள் இயக்கம் போன்ற அலுவல் சார்ந்த உரையாடல்கள் இந்தி, ஆங்கிலம் இரண்டைத் தவிர தமிழில் தகவல் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
தமிழ் அறவே கூடாது என்று இரயில்வே நிர்வாகம் சுற்றறிக்கை விடுத்திருப்பது கட்டாய இந்தித் திணிப்பு ஆகும். தென்னக இரயில்வே நிர்வாகத்தின் இந்தித் திணிப்பு சுற்றறிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது. உடனடியாக இந்தி சுற்றறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் 1937 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் 82 ஆண்டுகளாக இன்னும் நீறு பூத்த நெருப்புபோல் கனன்று கொண்டே இருக்கிறது என்பதை பாஜக அரசு மறந்துவிட வேண்டாம். மொழி உரிமைப் போர்க்களத்தில் இரத்தம் சிந்தி, உயிர்களை பலி கொடுத்து களம் கண்ட தமிழகம், மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, இந்தித் திணிப்புக்கு எதிராக சிலிர்த்து எழும்; நெருப்போடு விளையாட வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.