தமிழ்நாடு

அங்கன்வாடி பணியாளர்களை பணியிடமாற்றம் செய்தது ஏன்? : மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

அங்கன்வாடி பணியாளர்கள் பணிமாற்றப்பட்டது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சாதிய பாகுபாடுகளைக் களைய சமூக செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அங்கன்வாடி பணியாளர்களை பணியிடமாற்றம் செய்தது ஏன்? : மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த சுமார் 1,500 அங்கன்வாடி காலிப்பணியிடங்களை நிரப்ப மதுரையின் முன்னாள் மாவட்ட ஆட்சியர் நாகராஜன் கடந்த 3-ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி சிபாரிசுகள் எதுவுமின்றி தகுதியின் அடிப்படையில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

அதன்படி மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள வலையபட்டி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு ‘தலித்’ வகுப்பைச் சேர்ந்த ஜோதிலட்சுமி சத்துணவு அமைப்பாளராகவும், அன்னலட்சுமி என்பவர் சமையலராகவும் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்திற்கு அப்பகுதியில் உள்ள ஆதிக்க சாதி சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு அன்றைய தினம் தேவையான உணவுகளை சமைத்து வைத்துக் காத்திருந்துள்ளனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சமைத்ததால் ஆதிக்க சாதியை சேர்ந்த அப்பகுதி மக்கள் அவர்கள் வீட்டுக் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்துள்ளனர்.

இன்னும் சிலர் ஊழியர்கள் மீது புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து பெண் ஊழியர்களான ஜோதிலட்சுமி மதிப்பனூர் என்னும் இடத்திற்கும், அன்னலட்சுமி கிழவனேரிக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அங்கன்வாடி பணியாளர்களை பணியிடமாற்றம் செய்தது ஏன்? : மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

மேலும் இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ஆணையம் கூறியதாவது, “அங்கன்வாடியில் பட்டியல் இன பெண்கள் பணியாற்ற எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், நெருக்கடிகளுக்கு பணிந்து அங்கன்வாடி பணியாளர்களை இடமாற்றம் செய்தது ஏன்” எனக் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

பெண் ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதால் தற்போது வலையபட்டி அங்கன்வாடி மையத்திற்கு புதிதாக ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. இது குறித்து கிராம மக்களுடன், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக ஜோதிலட்சுமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “எனக்கு பணிநியமன ஆணை கிடைத்தபோது எனது சொந்த ஊரில் உள்ள மக்களுக்கு வேலை செய்யப்போகிறோம் என ஆர்வமாக இருந்தேன் ஆனால் எனது சாதியைச் சொல்லி தடுத்து விட்டனர். இந்தச் செயல் மிகுந்த வேதனையளிக்கிறது. இந்தக் காலத்திலும் சாதிய பாகுபாடு இருப்பது வருத்தமாக உள்ளது. ஆனால் நான் எங்கு சென்றாலும் எனது பணியை சிறப்பாக செய்வேன். அதில் நம்பிக்கையுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து, சாதிய பாகுபாடுகளைக் களைய அரசு கூடுதல் முயற்சி எடுக்கவேண்டும் எனவும், எதிர்ப்பு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளவேண்டும் எனவும் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories