தமிழ்நாடு

மின்வாரிய பணி நியமனம் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது: உயர்நீதிமன்றம் உத்தரவு!

மின்வாரிய உதவி பொறியாளர் பணியிடம் தொடர்பான இறுதி முடிவு நீதிமன்ற உத்தரவிற்கு உட்பட்டது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

மின்வாரிய பணி நியமனம் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது: உயர்நீதிமன்றம் உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

புதுக்கோட்டை மாவட்டம் திருவாப்பூரைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "2018 பிப்ரவரி 14ம் தேதி உதவி பொறியாளர் பணியிடத்திற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டு, தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தேர்வு நடைபெற்றது. உதவிப் பொறியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டதில் இட ஒதுக்கீட்டு கொள்கை முறையாக பின்பற்றப்படவில்லை. இட ஒதுக்கீட்டு பிரிவினர் பலர் பொதுப்பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி பணியிடங்களை நிரப்பக்கோரி முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து ஏப்ரல் 27-ல் உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தபோது எங்களது மனுவை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின் நகலுடன் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் தலைமைப் பொறியாளரை சந்தித்து இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை விடுத்தோம்.

ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் என் போன்ற பலர் தேர்வு செய்யப்படவில்லை. ஆகவே, எனக்காக ஒரு பணியிடத்தை காலியாக வைக்கவும், தமிழ்நாடு மின் பகிர்மான கழக தலைமை பொறியாளர் வெளியிட்ட தேர்வு பட்டியலை ரத்து செய்து, இட ஒதுக்கீடு கொள்கையை பின்பற்றி புதிய தேர்வுப் பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும். அதுவரை தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்வு பட்டியல் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இட ஒதுக்கீட்டு கொள்கை பின்பற்றப்படாததோடு, பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, இது தொடர்பாக மின்வாரிய தலைமை பொறியாளர் 2 வாரத்தில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு, பணி நியமனம் என்பது இந்த வழக்கில் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என தெரிவித்தார். மேலும் மின்வாரிய உதவி பொறியாளர் பணியிட தேர்வு பட்டியலில் உள்ள வெளி மாநிலத்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

banner

Related Stories

Related Stories