தமிழ்நாடு

மாணவிகள் தற்கொலைக்கு அரசே காரணம்: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்!

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவிகள் தற்கொலைக்கு அரசே காரணம்: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள்.

மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ, ஏஞ்சலின் சுருதி ஆகியோர் கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டனர். நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்திவருகிறது மத்திய அரசு.

இந்த ஆண்டும் தற்கொலை சோகங்கள் தொடர்கின்றன. தேர்வு முடிவுகள் வெளியான இரண்டு நாட்களில் தமிழகத்தைச் சேர்ந்த 3 மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர்.

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ தற்கொலை செய்துகொண்டார். அதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஷியா என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்ததை அடுத்து வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். நேற்றையதினம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த மோனிஷா என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வி என்றதும் மனவேதனையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவில் மண் அள்ளிப் போடும் நீட் என்னும் அநீதியைக் கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னையில் உள்ள சுதந்திர பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தமிழகத்தில் நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்து முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் தலைமைத் தாங்கினார்.

போராட்டம் குறித்து அவர் கூறுகையில், ”நீட் தேர்வு கொண்டு வந்தது முதலே தொடர்ந்து எதிர்த்து வருகின்றோம். அனிதா மரணத்தின் போது நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி போராடியதற்கு எங்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இன்னும் எத்தனை வழக்குகள் பதிவு செய்தாலும் போராட்டம் தொடரும். தமிழகத்தில் நீட் தேர்வினை ரத்து செய்யப்படும் வரை ஓயமாட்டோம். மாணவிகளின் தற்கொலைக்கு அரசே காரணம்”. என்றார்.

banner

Related Stories

Related Stories