இலவச - கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இனி 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தை களுக்கும் கல்வி அளிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலவச - கட்டாய கல்வி சட்டத்தை கொண்டுவந்தது.
இந்தச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகள் அருகே வசிக்கும் ஏழை மாணவர்கள், சமூகத்தில் நலிவடைந்த பிரிவினர் ஆகியோருக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும். அவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்திவிடும்.
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை பெறுவதற்கு விண்ணப்பம் ஆன்லைனில் நடைபெற்றது. கடந்த மாதம் 22 ம் தேதி துவங்கி மே 19 தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது இந்த சட்டத்தின் அடிப்படையில் தனியார் பள்ளிகளில் 1 லட்சத்து 21 ஆயிரம் இடங்கள் உள்ளன.
இந்த ஆண்டு கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 81ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிலிருந்து தகுதியான விண்ணப்பங்களாக 1 லட்சத்து 13 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கான மாணவர் சேர்க்கை நேற்றுடன் நிறைவடைந்தது.
நிர்ணயம் செய்யப்பட்டதை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கும் பள்ளிகளில் மட்டும் நேற்று குலுக்கல் முறையில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அடுத்த ஆண்டு முதல் இந்த மாணவர் சேர்க்கை முழுவதும் ஆன்லைனில் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.