தமிழகத்தில் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் ஏப்ரலில் முடிவடைந்ததையொட்டி ஏப்ரல் 13-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறைக்குப் பிறகு ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
நடப்பு கல்வியாண்டு முதல் 6 மற்றும் 9ம் வகுப்புகளுக்கு மட்டும் பாடப்புத்தகத்தில் மாற்றம் எதுவும் செய்யாமல், 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகப் படுத்துகின்றனர். ஜூன் 7ம் தேதி மாணவர்களுக்கு புதிய புத்தகப் பை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பள்ளி தொடங்கிய முதல் நாளே இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 3, 4, 5, 8 வகுப்பு புத்தகங்கள் அச்சிடும் நிலையில் உள்ளதால் பெரும்பாலான கிராமப்புற அரசுப் பள்ளிகளுக்கு இன்னும் பாடநூல்கள் முழுமையாக வழங்கப்படவில்லை என தகவல் வெளிவந்துள்ளது. புதிய பாடப் புத்தகங்கள் வழங்குவது குறித்து தமிழக அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் மாநிலம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என பெற்றோர், ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி பள்ளிகள் இன்று (ஜூன் 3) திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து அதன்படி, பள்ளிகள் திறக்கப்பட்டன. கிராமப்புறப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என பல இடங்களில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.