தமிழ்நாடு

கொடைக்கானலைப் பாதுகாக்க நலத்திட்டங்கள் வேண்டும் : வைகோ வலியுறுத்தல்!

கொடைக்கானல் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ.

கொடைக்கானலைப் பாதுகாக்க நலத்திட்டங்கள் வேண்டும் : வைகோ வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொடைக்கானல் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற முதுமொழிக்கு ஏற்ப உலக நாடுகளில் இருந்தும், இந்திய மாநிலங்களில் இருந்தும் கோடை வெயில் சுட்டெரிக்கும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தமிழகம் வரும் சுற்றுலாப் பயணிகள் இயற்கை எழில் கொஞ்சும் மலை வாசஸ் தலங்களில் தஞ்சம் அடைகின்றார்கள்.

சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாகத் திகழும் மலைகளின் இளவரசி கொடைக்கானல் வரும் பயணிகள் இனி இங்கு வரக்கூடாது என்கின்ற அளவுக்கு இந்தாண்டு கடுமையான மனவேதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அரசின் சரியான திட்டமிடல் இல்லாததும், ஐந்தாண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டிய கொடைக்கானல் நகர முழுமைத் திட்டம், ஆண்டுகள் பலவாக புதுப்பிக்கப்படாமல் இருந்ததுமே இதற்குக் காரணம்.

கொடைக்கானல் நகராட்சியில் 2500 சதுர அடி வீடு கட்டுவதற்கு மட்டுமே அனுமதி உள்ளது. வணிக நிறுவனங்கள் அமைப்பதற்கான திட்ட அனுமதியைப் பெறுவதற்கு திண்டுக்கல்லுக்கும், சென்னைக்கும் செல்ல வேண்டி உள்ளது. இதன் காரணமாகத்தான் வீடு கட்டுவதற்கான அனுமதியைப் பெற்று, வர்த்தக நோக்கில் பயன்படுத்தும் நிலை உள்ளது. கொடைக்கானல் நகராட்சி மூலமாகவே சம்பந்தப்பட்ட அனுமதி வழங்கினால் தவறுகள் நடக்காமல் இருக்கும்.

இயற்கைச் சூழலைப் பாதுகாக்க கட்டட வரைமுறைகள் ஒழுங்கு செய்திட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி கொடைக்கானலில் சுமார் 450 தங்கும் விடுதிகள் மூடி சீல் வைக்கப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு இடம் இல்லாமல், தங்கள் உடமைகளுடன் சாலை ஓர நடைபாதையில் படுத்து உறங்கி, சமைத்துச் சாப்பிட்டுச் செல்லும் நிலை இருக்கிறது. உணவகங்கள் முடக்கப்பட்டதால், வணிகர்கள் மிகப் பெரிய பொருளாதார முடக்கத்தைச் சந்தித்துள்ளனர். கொடைக்கானல் மக்கள் மீது நீதிமன்றமும், தமிழக அரசும் இரக்கமும் கருணையும் காட்டி இப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டிட வேண்டும்.

தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, கொள்கை முடிவு எடுத்து, கொடைக்கானலில் ஏற்கனவே நகராட்சி அனுமதி பெற்று கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்த கட்டடங்களை வரைமுறை செய்து அங்கீகரித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும்.

கொடைக்கானல் நகரம் 26.05.1845 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியாளர்களால் கண்டறியப்பட்டு, 26.05.2020 ஆம் ஆண்டு 175-வது அண்டு கொண்டாட உள்ள நிலையில், சுற்றுலாவை ஊக்குவிக்க உள்ளூர் மக்களின் ஆலோசனைகளைப் பெற்று, மத்திய, மாநில அரசுகள் கூடுதல் சிறப்பு நிதி ஒதுக்கி தொலைநோக்குத் திட்டங்கள் தயாரிக்க வேண்டும்.

குறிப்பாக விடுமுறை நாட்களில் விழி பிதுங்கும் போக்குவரத்து நெரிசலை சீர்செய்திட இருவழிச் சாலைகளாக விரிவாக்கம் செய்து, மையத் தடுப்புடன், பாதுகாப்பு தடுப்புச் சுவரை தரமான முறையில் அமைக்கப்பட வேண்டும். வாகனங்கள் நிறுத்த அடுக்குமாடி வாகன நிறுத்தம் போன்றவை அமைக்கப்பட வேண்டும். கொடைக்கானலிலிருந்து பெருமாள்மலை அடுக்கம் வழியாக பெரியகுளம் சாலை, கொடைக்கானல்பேரிச்சம் வழியாக மூணாறு சாலை போன்றவற்றைத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும்.

சாதாரண ஏழை எளிய சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் குறைந்த செலவில் தங்கும் விடுதிகள் கட்டப்பட வேண்டும். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் நவீன மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும். தற்போது உள்ள மருத்துவமனையின் தரம் உயர்த்தப்பட வேண்டும்.

விடுமுறை நாட்களில் தற்காலிக கழிப்பறைகள், நகரைச் சுத்தமாக வைத்துக்கொள்ள கூடுதல் பணியாளர்களை பணியமர்த்திட சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் விமான நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். தனியார் பங்களிப்புடன் கேபிள் கார் திட்டம் கொண்டுவர வேண்டும்.

மலைகளில் ஏற்படும் காட்டுத் தீயால் இயற்கை வளங்கள் அழிந்து போவதைத் தடுக்க வெளிநாடுகளில் உள்ளது போல் தீ அணைப்பு ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். ஹொலிகாப்டர் ஆம்புலென்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் இயற்கை எழில்கொஞ்சும் மலை வாசஸ்தலங்கள், நீர் வீழ்ச்சிகள், 1070 கி.மீ. நீளம் கொண்ட நீண்ட கடற்கரை, வனவிலங்கு சரணாலயங்கள், பறவைகள் சரணாலயங்கள், பழமையான வரலாற்று நினைவுச் சின்னங்கள், ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும் பாடப்பெற்ற புகழ்பெற்ற சைவ, வைணவ ஆலயங்கள் என்று அங்கிங்கெணாதபடி எல்லாம் இருந்து அன்னியச் செலவாணியை ஈட்டித் தந்து, சுற்றுலாவில் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாடு, தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தாததால் சுற்றுலாத் துறை நொடிந்து போய் உள்ளது. இதிலிருந்து சுற்றுலாத்துறையை மீட்டுருவாக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories