ஸ்டெர்லைட் ஆலையை மூட வற்புறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்திய பொதுமக்கள், கடந்த ஆண்டு மே 22-ம் தேதியன்று அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடத்தினர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அமைதியான முறையில் ஊர்வலமாக சென்ற போது, அவர்களிடம் முறையான பேச்சுவார்த்தை எதுவும் நடத்தாமல் காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
குறி வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மொத்தம் 15 பேர் படுகொலை செய்யப்பட்டனர். துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மட்டுமின்றி சில நூறு பேர் தடியடியால் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர் ஒருவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விஷயத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக கூறிய தேசிய மனித உரிமைகள் ஆணையம், வழக்கை முடித்து வைத்தது.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் விசாரணை நடத்துவதற்கு ஒரு நபர் கமிஷன் அமைத்தது போன்றவை திருப்தி அளிப்பதாக மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது.
தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூரச்சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்த போதிலும், மக்கள் மனதிலிருந்தும், உயிரிழந்த, படுகாயமடைந்தோரின் குடும்பங்களின் மனதிலும் இச்சம்பவம் ஆறாத ரணமாக உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஓராண்டு முடிவடைந்தும் இதுவரை நீதி கிடைக்காதது மிகுந்த வேதனையாக இருப்பதாக பொதுமக்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.