நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இவர்கள் நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர். மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை தினமும் ஒரு முதல் வகுப்பு மற்றும் இரு இரண்டாம் வகுப்பு என மூன்று பெட்டிகளுடன் மலை ரயில் இயக்கபபடுகிறது.
இந்நிலையில், மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுவதால் இன்று (மே 11) முதல் ஜூன் 16-ம் தேதி வரை வாரயிறுதி நாட்களில் நீலகிரி மலை ரயில் கூடுதல் பெட்டியுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும் போது, 'நீலகிரி மலை ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து 32 முதல் வகுப்பு இருக்கைகள் மற்றும் 100 இரண்டாம் வகுப்பு இருக்கைகளுடன் இயக்கப்படுகிறது. இந்நிலையில், கூடுதலாக சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் நோக்கில், மே 11-ம் தேதி முதல் வாரயிறுதி நாட்களில் நீலகிரி மலை ரயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டு, 72 முதல் வகுப்பு இருக்கைகளுடன் இயக்கப்படும். ஜூன் மாதம் 16-ம் தேதி வரை கூடுதல் பெட்டியுடன் ரயில் இயக்கப்படும்' என்றனர்.
சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக உதகை முதல் கேத்தி வரை தினமும் 3 முறை சிறப்பு ரயில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.