ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு அனுமதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்குமாறு கடந்த மே 2-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு உதவிபெறும் பள்ளியில் பணியாற்றும் நான்கு ஆசிரியர்கள், 2019-ம் ஆண்டு TET தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை பணிநீக்கம் செய்யத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாதவர்களை பணியில் நீடிக்க அனுமதிக்க முடியாது எனக் கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், தகுதித் தேர்வு அறிமுகப்படுத்திய 9 ஆண்டுகளில், தமிழகத்தில் இதுவரை 3 முறைதான் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு தெளிவான அரசாணை பிறப்பிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தனி நீதிபதி தேசிய தகுதித் தேர்வை அடிப்படையாக எடுத்துக்கொண்டுள்ளதாகவும் அது தவறான கருத்து என்றும் தமிழக ஆசிரியர்கள் தேசிய தகுதித் தேர்வை எழுத முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த வழக்கு விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் வைத்தியநாதன், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு அனுமதித்து விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.