பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிடாமல் அண்ணா பல்கலைக்கழகம் தாமதப்படுத்துவதால், கல்லூரியைத் தேர்வு செய்வதில் சிக்கலைச் சந்திப்பதாகவும், அதிக பணம் கொடுத்து நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், 2013-ம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகித அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் 2016, 2017-ம் ஆண்டுகளுக்கான தரவரிசைப் பட்டியல் மட்டுமே இடம்பெற்றுள்ளன. 2018-ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்த கல்வியாண்டுக்கான விண்ணப்பப் பதிவு துவங்கி இருக்கும் நிலையில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இதுவரை விண்ணப்பித்துள்ளனர். மாணவர்களில் பலரும் தாங்கள் விரும்பும் கல்லூரி கிடைக்குமோ கிடைக்காதோ என்ற அச்சத்தில் முன்கூட்டியே நிர்வாக ஒதுக்கீட்டிற்காக கல்லூரிகளை அணுகி லட்சங்களில் பணம் செலுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டிற்கான தேர்வு முடிவுகளை அறிவித்து, முழு தரவுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் வைத்திருந்தாலும், தரவரிசைப் பட்டியலை வெளியிடாமல் இருப்பதில் சில கல்லூரிகளின் அழுத்தம் இருக்கலாம் என கல்வியாளர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு உடனடியாக பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிடவேண்டும் என்பதுதான் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்பு.