தமிழ்நாடு

ட்விட்டரில் ட்ரெண்டாகும் “#TamilnaduJobsForTamils” என்கிற ஹேஷ்டேக்!

பல்வேறு மத்திய அரசு பணிகளில் தொடர்ந்து வடமாநிலத்தவர்களே நியமிக்கப்பட்டு வருவதைக் கண்டித்தும், ட்விட்டரில் இளைஞர்களால் “#தமிழகவேலைதமிழருக்கே” என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

ட்விட்டரில் ட்ரெண்டாகும் “#TamilnaduJobsForTamils” என்கிற ஹேஷ்டேக்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ரயில்வே உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு பணிகளில் தொடர்ந்து வட மாநிலத்தவர்களே நியமிக்கப்பட்டு வருவதை கண்டித்தும், அதற்குத் துணைபோகும் மாநில அரசைக் கண்டித்தும் ட்விட்டரில் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட "#தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils " என்கிற ஹேஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

ரயில்வே பழகுநர் (அப்ரண்டிஸ்) தேர்வில் மொத்தமுள்ள 1,765 இடங்களில் 1,600 இடங்களில் பிற மாநிலத்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற பணி நியமனத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி சென்னை பெரம்பூர், கோவை என ரயில்வே பணிகளில் பிற மாநிலத்தவர்களே 90 விழுக்காடு நியமனம் பெற்றுள்ளனர்.

இதுபோல், கடந்த ஆண்டு நடைபெற்ற அஞ்சல்துறையின் தபால்காரர் (போஸ்ட்மேன்) பணிக்காக நடந்த தேர்வில் தமிழ் பாடத்தில், தமிழ்நாட்டு இளைஞர்கள் தேர்ச்சி பெறாமல் போக, தமிழே தெரியாத வட மாநில இளைஞர்கள் தேர்வாகியது எப்படி என்கிற கேள்வியும் எழுகிறது.

இந்த ஆண்டு நடைபெற உள்ள, அஞ்சல் துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கான தேர்விற்கு, வேண்டுமென்றே வட மாநிலங்களில் ஒரு மாதம் முன்பே அறிவிப்பு கொடுத்துவிட்டு, தமிழ்நாட்டில் 10 நாள் இடைவெளியில் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பிக்க சென்றால், தமிழக இளைஞர்களின் விண்ணப்பம் வேண்டுமென்றே நிராகரிக்கப்படுவதாகவும் குறிப்பிடுகிறார்கள் பாதிக்கப்பட்ட இளைஞர்கள்.

ரயில்வே, அஞ்சல்துறை மட்டுமின்றி பிற மத்திய துறைகளிலும் இந்தப் போக்கு தலைதூக்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வேலைகளைக் குறி வைத்து வட மாநிலங்களில் முகவர்கள் செயல்படுகின்றனர். பல்வேறு முறைகேடுகள் மூலம் தகுதியே இல்லாதவர்கள் இங்குள்ள வேலைகளில் பணி நியமனப் பெற்று வருகின்றனர்.

மத்திய அரசு வேலைகள் பறிபோவது ஒருபுறமிருக்க, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் பிற மாநிலத்தவரும் பங்கேற்கலாம் என்று அ.தி.மு.க அரசு அறிவித்தது. இதனால், தமிழ்நாட்டு அரசு அலுவலகங்களிலும் கடைநிலைப் பணியாளர் இடத்திற்கு கூட பிற மாநிலத்தவர்கள் சேர வழி வகுத்துள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இனிமேல் வேலைக்கு ஆள் நியமிக்கும்போது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வேலைக்கு ஆள் சேர்க்க வேண்டும். மண்ணின் மக்களுக்கே வேலை வாய்ப்பு உரிமை சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

"#தமிழகவேலைதமிழருக்கே, #TamilnaduJobsForTamils " என்கிற ஹேஷ்டேக் மூலம் தமிழக இளைஞர்கள் தங்கள் மனக் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories