தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ரத்தானதால் மற்ற 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட வாக்குப்பதிவில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இதில் அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில் 80.41% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக தென் சென்னை தொகுதியில் 56% வாக்குகளும் பதிவாகியுள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னையில் பதிவான வாக்குகள் அடங்கிய இயந்திரங்கள் 3 வெவ்வேறு வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளது.
தென் சென்னை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திலு, வட சென்னை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை வாக்குப்பதிவு இயந்திரங்கள் லயோலா கல்லூரியிலும் வைக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறுகிறது.