தமிழ்நாடு

வறண்டு போகும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி !

கடந்த ஆண்டு போதுமான பருவமழை பெய்யாததால் தற்போது செம்பரம்பாக்கம் ஏரி வறண்டு விடும் நிலையை எட்டி உள்ளது.செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது வெறும் 17 மில்லியன் கன அடி மட்டுமே இருப்பு உள்ளது.

chembarambakkam lake
google chembarambakkam lake
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் புழல், பூண்டி, சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகள் மூலம் சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் முக்கியமானதும், மிகப்பெரிய ஏரியுமாக திகழ்வது செம்பரம்பாக்கம் ஏரி. இந்த ஏரியின் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும். தமிழகத்தில் உள்ள நடுத்தர அணைகளுக்கு இணையான கொள்ளளவு கொண்டது இந்த ஏரி.

செம்பரம்பாக்கம் ஏரி, சென்னையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளது. இந்த ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் அடையாறு ஆற்றில் இணைந்து மணப்பாக்கம், திருநீர்மலை, நந்தம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் வழியாக அடையாறு முகத்துவாரத்தில் இணைந்து வங்கக்கடலில் கலக்கிறது. இந்த ஏரியில் இருந்து தான் அடையாறு ஆறு பிறக்கிறது.

கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் வரலாறு காணாத அளவில் பெய்த அடை மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சென்னையை மட்டும் அல்லாமல், தமிழகத்தையே கதி கலங்க வைத்து மிரட்டியது செம்பரம்பாக்கம் ஏரி.ஒவ்வொரு நாளும் ஏரியை பற்றி ஒவ்வொரு தகவல்கள் ஊடகங்களில் வருவதை விடவும் சமூக வலைத்தளங்களில் வந்த தகவல்கள் அதிரவைத்தன. குறிப்பாக அந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி அதிகபட்சமாக 470 மில்லி மீட்டர் அளவு மழை பெய்தது. அப்போது செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து விமர்சனங்களும் பரபரப்பாக அள்ளி வீசப்பட்டன.

ஆனால் கடந்த ஆண்டு போதுமான பருவமழை பெய்யாததால் தற்போது செம்பரம்பாக்கம் ஏரி வறண்டு விடும் நிலையை எட்டி உள்ளது.செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது வெறும் 17 மில்லியன் கன அடி மட்டுமே இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து எதுவும் இல்லை. ஆனால் குடிநீர் தேவைக்காக தினசரி 13 கன அடி வீதம் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.ஏரியில் உள்ள 15 ஷட்டர்கள் இருக்கும் பகுதிகளில் மட்டும் குட்டையில் தண்ணீர் தேங்கிக்கிடப்பது போன்று சிறிதளவு மட்டும் தண்ணீர் தேங்கிக்கிடக்கிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

பருவமழையால் போதிய தண்ணீர் வரத்து இல்லாததால் தற்போது வறண்டு விடும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் 22 கன அடியாக இருந்த நீர் மட்டம் தற்போது 17 கன அடியாக குறைந்து உள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதத்தின் முதல் பகுதி வரை,இந்த ஏரி முற்றிலுமாக வறண்டு காணப்பட்டது.தற்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் முற்றிலும் வறண்டு விடும் நிலைக்கு இந்த ஏரி தள்ளப்பட்டு உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

banner

Related Stories

Related Stories