இந்தியாவில் நடக்கும் முதல் தர கிரிக்கெட் ஆட்டத்தில் முதன்மையானது ரஞ்சி கோப்பை. இந்தியா முழுவதும் உள்ள 38 அணிகள் பங்கேற்கும் ரஞ்சி கோப்பையின் கடந்த சீசனில் பீகார் - மும்பை அணிகள் மோதிய போட்டி பீகாரின் பட்ரா நகரில் நடைபெற்றது.
இந்த போட்டியில் 12 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி என்பவர் பீகார் அணிக்காக அறிமுகமானார். இதன் மூலம் இந்திய முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான இளம்வீரர் என்ற சாதனையை படைத்தார். அந்த போட்டியில் தல் இன்னிங்சில் 19 ரன்களும், இரண்டாம் இன்னிங்சில் 12 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தார்.
சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் ஆகியோர் தங்கள் 15 வயதில் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமாகிய நிலையில், வைபவ் சூர்யவன்ஷியின் இந்த சாதனை இந்தியா முழுவதும் பேசப்பட்டது. இந்த நிலையில், தனது 13-வது வயதில் சர்வதேச போட்டியில் சதமடித்து வைபவ் சூர்யவன்ஷி சாதனைப் படைத்துள்ளார்.
சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 19 வயதுக்குட்பட்டோருக்கான (Under 19 ) டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சார்பில் களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி 58 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
இதன் மூலம் 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் குறைந்த வயதில் சதமடித்த வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 293 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.