33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஒலிம்பிக் தொடரில் 206 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்த தொடரில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர், வீராங்கனைகளும் பங்கேற்கவுள்ளனர். இந்த தொடரில் நேற்று முன்தினம் பெண்களுக்கான 66 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டைப் போட்டியின் ரவுண்ட ஆப் 16 சுற்று போட்டி நடைபெற்றது.
இதில் இத்தாலியைச் சேர்ந்த ஏஞ்சலா கரினி, அல்ஜீரியாவைச் சேர்ந்த இமானே கெலிஃப் ஆகியோர் மோதினர். இந்த போட்டியின் 46வது நொடியிலேயே இமானே கெலிஃப்பின் தாக்குதலால் ஏஞ்சலா கரினியின் மூக்கில் இரத்தம் வழிந்தது. இதனால் ஏஞ்சலா கரினி போட்டியை பாதியிலேயே நிறுத்தினார்.
மேலும் இமானே கெலிஃப் பெண்ணல்ல ஆண் என்றும், ஆண்தன்மை கொண்ட வலிமைமிக்க அவருடன் போட்டிப் போட முடியாது என்றும் பேட்டியளிக்க அவரின் குற்றச்சாட்டு இணையத்தில் வைரலானது. கடந்த 2023ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் தொடரில் இமானே கெலிஃப் உடம்பில் ஆண்தன்மை அதிகமிருப்பதாக கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
எனினும் ஒலிம்பிக் தொடருக்கு முன்னதாக மருத்துவப்பரிசோதனை இமானே கெலிஃப்க்கு சாதகமாக வர, அவர் இந்த தொடரில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனாலும் தற்போது அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த நிலையில், இமானே கெலிஃப்க்கு இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த் ஆதரவளித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், "இமானே கெலிஃப்பல சோதனைகளுக்குப் பிறகே ஒலிம்பிக்கில் விளையாட அனுமதிக்கப்பட்டிருப்பார். அவர் ஒரு ஆண் என்றால் அவரால் ஒலிம்பிக்கில் விளையாடி இருக்கவே முடியாது. அவர் போட்டிகளில் தோற்ற போதெல்லாம் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழவில்லை. இப்போது அவர் போட்டியில் வென்றதும் இந்த குற்றச்சாட்டுகள் எழ ஆரம்பித்துள்ளன. அவருக்கு ஆதரவாக நாம் இருக்கவேண்டும் " என்று கூறியுள்ளார். இந்திய வீராங்கனை டூட்டி சந்த்தும் பாலின சர்ச்சையில் சிக்கி பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.