33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த ஒலிம்பிக் தொடரில், 206 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த தொடரில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர், வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.
மேலும் இந்த போட்டித் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள 117 வீரர்களில் 13 வீரர்கள் தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொண்டுள்ளனர். இது தேசிய அளவில் மூன்றாவது இடமும், தென்னிந்திய அளவில் முதலிடமும் ஆகும். இந்த போட்டி தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், குத்துச்சண்டை வீராங்கனைகள் இத்தாலியைச் சேர்ந்த ஏஞ்சலா கரினி, அல்ஜீரியாவைச் சேர்ந்த இமானே கெலிஃப் விவகாரமும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த சூழலில் தற்போது சீனாவை சேர்ந்த வீரர் ஒருவர், தனது காதலியான சக வீராங்கனைக்கு திருமண விருப்பத்தை முன் வைத்துள்ளார். அதற்கு அந்த வீராங்கனையும் சம்மதம் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் வாழ்த்துகளை பெற்று வருகிறது.
சீன நாட்டை சேர்ந்த ஹுவாங் யா கியாங் (Huang Ya Qiong) என்ற வீராங்கனை, கலப்பு இரட்டையர் பேட்மிண்டன் விளையாட்டில் நேற்று (ஆகஸ்ட் 2) தங்கம் வென்றுள்ளார்.
இந்த சூழலில் இந்த போட்டி முடிந்தவுடன் தங்கப் பதக்கத்தை பெற்ற பின்னர், சீனாவின் ஆண்கள் இரட்டையர் பேட்மிண்டன் வீரரான லியு யுச்சென் (Liu Yuchen) என்ற வீரர், தனது காதலியான ஹுவாங் யா கியாங்கிற்கு முட்டி போட்டு தனது காதலை வெளிபடுத்தி, திருமணத்துக்கான சம்மதம் கேட்கவே, அவரும் ஆனந்த கண்ணீருடன் உடனே சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து ஆயிரக்கணக்கனோர் முன்னிலையில் தனது பையில் வைத்திருந்த மோதிரத்தை, தனது காதலி ஹுவாங் யா கியாங்கிற்கு மாட்டிவிட்டு, இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தியுள்ளனர். தற்போது இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.