ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 8 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்கும் என ஐசிசி அறிவித்துள்ள நிலையில், அது குறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்றது. இதனால் அடுத்து பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்குமா என்ற கேள்வி தற்போது பரபரப்பாக எழுந்த நிலையில், அந்த தொடருக்கான ஏற்பாடுகளில் பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருகிறது.
ஆனால் இந்த தொடரில் இந்தியா பங்கேற்காது என்றும், இந்திய அரசு அதற்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்தியா பங்கேற்கும் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகம் அல்லது இலங்கையில் நடத்த பிசிசிஐ சார்பில் ஐசிசி யிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், இந்தியா இல்லை என்றால் கிரிக்கெட் ஒன்றும் முடிந்து விடாது என பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு சென்று 50 உலகக் கோப்பை தொடரில் விளையாடியதால் இந்தியாவும் பாகிஸ்தானுக்கு வந்து விளையாடவேண்டும். இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வந்து விளையாட ஆசைப்படுகிறார்கள்.
சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் பாகிஸ்தானில் நடத்தப்படுகிறது என்றால் அது பாகிஸ்தானில் மட்டும் தான் விளையாடப்பட வேண்டும். அதனை வேறு எங்கும் மாற்றக்கூடாது. இந்தியா இங்கு வர விரும்பவில்லை என்றால் அவர்கள் இல்லாமலேயே தொடரை நடத்துவது தான் சரியாக இருக்கும். இந்தியா வந்து பங்கேற்கவில்லை என்றால் கிரிக்கெட் ஒன்றும் முடிந்து விடாது"என்று கூறியுள்ளார்.