நடப்பாண்டு இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியான இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி நேற்று நியூயார்க்கில் உள்ள Nassau County சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் முதல் ஓவரிலேயே சிக்ஸர் விளாசினார். ஆனால் கோலி, ரோஹித் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணியின் சரிவு அங்கேயே தொடங்கியது.
அடுத்த வந்த ரிஷப் பந்த் அக்சர் படேல் இணை சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 20 ரன்னில் அக்சர் படேல் ஆட்டமிழக்க, அபாரமாக ஆடிய பந்த்தும் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த இருவரை தொடர்ந்து அடுத்த வந்த இந்திய வீரர்கள் விரைவு கதியில் ஆட்டமிழந்தனர்.
இதனால் இந்திய அணி, 89-3 என்ற நிலையில் இருந்து 96-7 என்று மோசமானது. இறுதியில் 19 ஓவரில் 119 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியும் ஆரம்பத்தில் சிறப்பாக தொடங்கியது.
கடைசி 8 ஓவர்களில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 48 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 8 விக்கெட்டுகள் கைவசம் இருந்தன. ஆனால் அதன்பின்னர் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க இறுதியில் அந்த அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களே குவிக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வென்று குரூப் பிரிவில் முதல் இடத்துக்கு முன்னேறியது.