நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் பரிமாற்ற முறையில் குஜராத் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வளம்வந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மும்பை அணிக்கு வந்ததும் கேப்டனாக்கப்பட்டதால் அந்த அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, சூரியகுமார், பும்ரா ஆகியோர் ஹர்தீக் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.
மேலும், ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்களும் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற குஜராத் - மும்பை அணிகளுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் கிண்டல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் மும்பை அணியின் சொந்த மைதானமான வான்கடேவில் நடைபெற்ற போட்டியில் சொந்த அணியின் ரசிகர்களாலேயே ஹர்திக் பாண்டியா கிண்டலுக்கு உள்ளாகினார்.அதோடு ஒரு அணியாக ஒருங்கிணைந்து செயல்படாத மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது லீக் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
இந்த நிலையில், நான் ஹர்திக் பாண்டியாவுக்கு முழு ஆதரவாக இருக்கிறேன் என்று ரோஹித் சர்மா கூறாதது ஏன் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆரோன் பின்ச் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "ரசிகர்களிடம் ஹர்திக் பாண்டியாவுக்கு இருந்த கடுமையான எதிர்ப்பு, டி20 உலகக்கோப்பை அணி அறிவிக்கப்பட்டதிலிருந்து அப்படியே மாறி இருக்கிறது. தற்போது அவரை ரசிகர்கள் எதுவும் கூறுவதில்லை.
ஹர்திக் பாண்டியாவுக்கு எதிர்ப்பு எழுந்தபோது ரோகித் சர்மா வெளியே வந்து ரசிகர்களிடம் பேசுவார் என நான் நினைத்தேன். இது மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரு திட்டம் ஆகும், நான் ஹர்திக் பாண்டியாவுக்கு முழு ஆதரவாக இருக்கிறேன் என்று அவர் கூறியிருந்தால் அனைத்தும் தலைகீழாக மாறியிருக்கும். ஆனால் அவர் இதனை செய்யவில்லை"என்று கூறியுள்ளார்.