சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கு பின் இந்திய அணியில் இருந்து நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவரை ரஞ்சி தொடரில் ஆடுமாறு பிசிசிஐ அறிவுறுத்தியது.
ஆனால் முதுகு பிடிப்பு காரணமாக ரஞ்சி டிராபி தொடரில் விளையாடாமல் விலகினார். அதே நேரம் அவர் நல்ல உடல்தகுதியுடன் இருப்பதாக தேசிய கிரிக்கெட் அகாடெமியின் மருத்துவ பிரிவு தலைவர் பிசிசிஐ-க்கு கடிதம் எழுதினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து வரும் ஐபிஎல் தொடரில் விளையாட தயாராடும் வகையிலேயே முதுகு பிடிப்பு காரணமாக ரஞ்சி டிராபி தொடரில் விளையாடாமல் தவிர்த்துள்ளார் என்று விமர்சனம் எழுந்தது. இதன் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயரை வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் இருந்து பிசிசிஐ நீக்கியது.
இதனிடையே நேற்று ஐபிஎல் போட்டி முடிந்ததும் ஷ்ரேயாஸ் ஐயர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது. தேசிய கிரிக்கெட் அகாடமி அவர் குறித்து எழுதிய கடிதம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்துச் சிந்திக்க நான் விரும்பவில்லை. மாறாக எனது கேமில் கவனம் செலுத்த விரும்புகிறேன்" என்று கூறினார்.
பின்னர், பிசிசிஐ சம்பள ஒப்பந்தத்திலிருந்து அவரின் பெயரை நீக்கியது குறித்து பேசிய அவர், "கடந்த காலத்தைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ அதிகமாகச் சிந்திக்க கூடாது. அப்படி செய்தல் தவறுகளை செய்வோம். அதுதான் நான் கற்றுக்கொண்ட பாடம். கையில் இல்லாத ஒரு விஷயத்துக்காகக் கவலைப்படக்கூடாது. தவறில் இருந்து கற்றுக்கொண்டு மீண்டும் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வேன்" என்று கூறியுள்ளார்.