இந்திய அணி கடந்த 2007-ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் தோல்வியைத் தழுவியது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டே 20 ஓவர் உலகக்கோப்பை தொடரை ஐசிசி அறிவித்தது. அந்த தொடரில் இருந்து மூத்த இந்திய வீரர்கள் விலகிய நிலையில், இளம் இந்திய அணிக்கு தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார் .
இந்திய அணி 1983-ம் வருடம் முதல் முறையாக கிரிக்கெட் உலககோப்பையை வென்றது. அதன் பின்னர் பல வருடங்களாக உலககோப்பையையே வெல்லாத நிலையில், இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் எம்.எஸ்.தோனி.
அதன்பின்னர் 2011 உலககோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என தோனி கேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. இந்திய அணியை தவிர்த்து ஐபிஎல் தொடரிலும் தோனி சென்னை அணிக்காக 5 முறை கோப்பையை வேண்டுகொடுத்துள்ளார்.
இந்த நிலையில், பிசிசிஐ-யிடம் தோனியை கேப்டனாக கூறிய சம்பவத்தை இந்திய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் நினைவு கூர்ந்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "2007-ம் ஆண்டு உலகக்கோப்பை தோல்வியால் பிசிசிஐ மீண்டும் எனக்கு கேப்டன் பதவியை வழங்கும் முடிவில் இருந்தது. ஆனால், அப்போது நான் முழு உடற்தகுதியோடு இல்லை. எனது உடல் மோசமான நிலையில் இருக்கிறது. கேப்டன் அணியில் வருவதும், போவதுமாக இருக்கக் கூடாது என்று கூறி கேப்டன் பதவியை மறுத்தேன்.
அப்போது இளம் வீரர் தோனி சரியான முடிவுகளை அவர் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அந்தச் சமயத்தில் நான் பிசிசிஐ தலைவரிடம், தோனியிடம் தலைமைக்கேற்ற பண்புகள் உள்ளன. அவரை நீங்கள் கேப்டனாக்க ஆலோசிக்கலாம் எனக் கூறினேன். தோனி மீதான என்னுடைய கணிப்பு சரியாக இருந்தது" என்று கூறியுள்ளார்.