இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அதனைத் தொடர்ந்து டி20 அணியில் இதனால் இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மாவின் டி20 பயணம் முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.
ஆனால், அவர்களின் டி20 பயணம் குறித்து அவர்களே முடிவே செய்துகொள்ளலாம் என பிசிசிஐ சார்பில் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இந்த இருவரும் அணியில் இடம்பிடித்தனர். இதனால் அடுத்த உலகக்கோப்பை தொடரிலும் அவர்கள் இடம்பெறுவர் என்பது ஏறக்குறைய உறுதியானதாக கூறப்பட்டது.
ஆனால், 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலியை நீக்க தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது.
இங்குள்ள மைதானத்தில் பந்துகள் மெதுவாக பேட்ஸ்மேனை நோக்கி வரும். மேலும், சுழற்பந்துக்கும் இங்குள்ள மைதானங்கள் அதிகமாக ஒத்துழைக்கும். இது போன்ற மைதானங்களில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக உள்ளதால், இந்த தொடருக்கு விராட் கோலியை நீக்க அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியின் இடத்தை பற்றி கேள்வி எழுப்பபவர்கள் தெருவோர கிரிக்கெட்டைச் சேர்ந்தவர்கள் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது இர்பான் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "யாராலும் விராட் கோலி இன்றி ஒரு அணியை உருவாக்க முடியாது. அவர் பெரிய பேட்ஸ்மேன். கடந்த உலகக் கோப்பையில் அவர் இந்தியாவுக்காக 3 – 4 போட்டிகளை தனியே வென்றுக் கொடுத்தார்.
ஒருவேளை அந்தப் போட்டிகளில் விராட் கோலி இறங்கி நிற்காமல் போயிருந்தால் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக இந்தியா தோல்வியை சந்தித்திருக்கும். இந்த சூழலில்அணியில் விராட் கோலி இடத்தை பற்றி கேள்வி எழுப்புவது நியாயமற்றது. டி20 உலகக் கோப்பையில் அவருடைய இடத்தை பற்றி கேள்வி எழுப்பபவர்கள் தெருவோர கிரிக்கெட்டைச் சேர்ந்தவர்கள்"என்று கூறியுள்ளார்.