இந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் ஐசிசி உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ள நிலையில், ஸ்டாப் கிளாக் என்ற புதிய விதிமுறையை ஐசிசி அறிவிமுகப்படுத்தியுள்ளது.இது குறித்த ஐசிசி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவர் முடிந்ததும் அடுத்த 60 நொடிக்குள் மற்றொரு ஓவரை ஃபீல்டிங் செய்யும் அணி வீச வேண்டும். அதை நடுவர்கள் கண்காணிப்பார்கள்.
60வது நொடி முடிவதற்குள் அடுத்த ஓவரை ஃபீல்டிங் செய்யும் அணி வீசவில்லை என்றால் முதல் 2 முறை நடுவர்கள் எச்சரிக்கை கொடுப்பர். 3-வது முறை அதே தவறு நடந்தால் அதற்கு தண்டனையாக 5 ரன்கள் பெனால்டி கொடுக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், "ஓவர்களுக்கு நடுவே விக்கெட் விழுந்து புதிய பேட்ஸ்மேன் வரும் போதும், அதிகாரப்பூர்வ தண்ணீர் இடைவெளி விடும் போதும், ஒரு வீரருக்கு காயம் ஏற்படும் போது நடுவர் அனுமதிக்கும் போதும், தவிர்க்க முடியாத காரணத்தால் நிலைமை கைமீறும் போதும் இந்த விதிமுறைக்கு விலக்கு அளிக்கப்படும்" என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறை வரும் ஜூன் மாதம் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையில் இருந்து நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்றும் ஐசிசி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர உலகக்கோப்பை டி20 போட்டிகள் வானிலை போன்ற சூழ்நிலைகளால் பாதிக்கப்படும் நிலையில், அதற்கு முடிவை அறிந்துகொள்ளவும் சில விதிமுறைகளை ஐசிசி அறிவித்துள்ளது.
அதன்படி உலகக்கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டிகளின் வெற்றிகளை தீர்மானிக்க இரு அணிகளும் குறைந்த பட்சம் 5 ஓவர்கள் விளையாடியிருக்கவேண்டும் என்றும், நாக் அவுட் சுற்று போட்டிகளின் வெற்றிகளை தீர்மானிக்க இரு அணிகளும் குறைந்தபட்சம் 10 ஓவர்கள் விளையாடியிருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.