இந்தியாவில் 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் அமைந்திருக்கும் 'நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்' நடைபெற்ற போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் சந்தித்தன.
இதில் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 191 ரன்கள் எடுத்தது. இதனால் 192 ரன்கள் வெற்றி இலக்கை குறி வைத்து இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய வீரர்களின் ஆட்டத்தால், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தானுடன் மோதி, இந்தியா வென்றதற்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வரும் நிலையில், பாகிஸ்தான் வீரரிடம் இந்திய ரசிகர்கள் மோசமாக நடந்துகொண்ட வீடியோ வெளியாகி பலர் மத்தியிலும் கண்டனங்களை பெற்றுத்தந்தது.
இந்த ஆட்டத்தின்போது பாகிஸ்தான் பேட்டிங் செய்துகொண்டிருந்த சமயத்தில், பாக். அணி வீரரான முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டை இழந்து, பெவிலியன் நோக்கி திரும்பி சென்றுகொண்டிருந்தார். அப்போது ஸ்டேடியத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் சிலர், ரிஸ்வானை நோக்கி, "ஜெய் ஸ்ரீ ராம்.. ஜெய் ஸ்ரீ ராம்.." என்று கோஷங்களை எழுப்பினர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இந்தியாவில் போட்டிக்கு வரும் மற்ற நாட்டு வீரர்களை இதுபோல் அவமரியாதையாக நடத்தக்கூடாது என்று பலரும் கருத்து தெரிவித்த நிலையில், இணையத்தில் #Sorry_Pakistan என்ற ஹேஸ்டாக் ட்ரெண்டாகியது.
இந்த நிலையில், மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சூழல் நிலவியதால் அந்தப் போட்டியில் விளையாடுவதே மிகவும் கடினமாக இருந்தது என அந்நாட்டின் பயிற்சியாளராக செயல்பட்ட மிக்கி ஆர்தர் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "உலகக் கோப்பை தொடரின் அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில், இந்தியாவுக்கு மட்டுமே ஆதரவு இருந்தது.
பாகிஸ்தானுக்கு ஆதரவே இல்லாத அந்த சூழலில் விளையாடுவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான சூழல் நிலவியதால் அந்தப் போட்டியில் வீரர்கள் தங்கள் செயல்பாட்டை காட்டுவது கடினமாக இருந்தது. இருப்பினும், பாகிஸ்தான் வீரர்கள் இதையெல்லாம் காரணமாக கூறாமல் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தனர்" என்று கூறியுள்ளார்.