22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் பிரான்சும், அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டம் ஆடியது.
அதன்பலமாக 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்த, அதனை அடுத்து 36-வது நிமிடத்தில் டி மரியா கோல் அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்த நிலையில், இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.
அதில், இறுதி சில நிமிடங்களில் அடுத்தடுத்து 2 கோள்களை அடித்து பிரான்ஸ் அணி அதிர்ச்சியளித்தது.90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் 2-2 கோல் கணக்கில் சம நிலையில் இருந்ததை அடுத்து, போட்டி கூடுதல் நேர ஆட்டத்திற்கு சென்றது.
அதிலும் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், போட்டி பெனால்டி கிக் முறைக்கு சென்றது. இதில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் உலகமே எதிர்பார்த்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றது.உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வென்றதில் உலகத்தில் உள்ள மூளை முடுக்கில் உள்ள ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர்.
இந்த நிலையில், மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி இந்தியாவின் கேரளாவுக்கு வந்து விளையாட விருப்பம் தெரிவித்ததாக கேரள அமைச்சர் அப்துர் ரஹீமான் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், உலகக்கோப்பையை அர்ஜென்டினா அணி வென்ற பிறகு கேரளாவுக்கு நட்பு ரீதியிலான போட்டியில் விளையாட வருமாறு அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தை தொடர்பு கொண்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதற்கு தற்போது அர்ஜென்டினா கால்பந்து சங்கம் மின்னஞ்சல் மூலம் பதிலளித்துள்ளது, அதில், உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அணிக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி. நாங்கள் கேரளாவுக்கு வந்து விளையாட ஆர்வமாக இருக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி விரைவில் இந்தியா வந்து விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.