உள்நாட்டு தொடர்களில் கலக்கி வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியில் இடம்பிடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டும் அந்த அணி சாய் சுதர்சனை தக்கவைத்தது.அதன்பின் ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் குஜராத் அணி சாய் சுதர்சனுக்கு வாய்ப்புகள் வழங்கியது.
பின்னர் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் 43 ரன்கள் குவித்து ரிடையர்ட் கட் முறையில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து இறுதிப்போட்டியில் 47 பந்துகளில் 6 சிக்சர், 8 பவுண்டரிகள் என 96 ரன்கள் விளாசி இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார். ஆட்டமிழந்து ஓய்வறைக்கு சென்ற அவருக்கு குஜராத் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஐபிஎல் தொடரில் தான் காட்டிய அதிரடியை அவர் டி.என்.பி.எல் தொடரிலும் தொடர்ந்தார். இதன் காரணமாக அவருக்கு இலங்கையின் கொழும்பு நகரில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 5 ஏ அணிகள் பங்கேற்கும் எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி சதம் விளாசினார். தொடர்ந்து இங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சர்ரே அணி சாய் சுதர்சனை ஒப்பந்தம் செய்தது. அங்கு ஹம்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் 73 ரன்களை விளாசி மோசமான நிலையில் இருந்து சர்ரே அணியை காப்பாற்றினார்.
பின்னர் இரண்டாவது இன்னிங்சில் அணியை தோல்வியில் இருந்த காக்க இறுதிவரை போராடி கடைசி வீரராக 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதே நேரம், பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் இரண்டு அணிகளை சேர்ந்த வீரர்களும் சொதப்பிய நிலையில், அங்கு சிறப்பாக ஆடிய சாய் சுதர்சனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டை தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து இந்திய அணி அடுத்ததாக தென்னாபிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் நிலையில், அதில் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசியுள்ள சாய் சுதர்சன் “நான் வார்த்தைகளை தொலைத்து விட்டேன். இதனை எப்படி விவரிப்பது என எனக்கு தெரியவில்லை. இதுவே எனது ஆரம்பம். நான் இன்னும் பல விதங்களில் என்னை மேம்படுத்த வேண்டியுள்ளது.
நான் இங்கிலாந்தில் கவுண்டி அணியில் சர்ரே அணிக்கு விளையாடும் போது, அங்கு நான் நிறைய கற்றுக்கொண்டேன். அந்த தொடர் என்னை நல்ல பேட்டராக உயர்த்தியது. தற்பொழுது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரில் தமிழ்நாடு அணியை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற்றுவதே என்னுடைய முக்கிய வேலையாகும்” என்று கூறியுள்ளார்.