இந்தியாவில் 2023-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டித்தொடரில், மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அரையிறுதிபோட்டியில், இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அதே போல மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த தொடரில் இதுவரை தோல்வியே காணாமல் 10 தொடர் வெற்றியுடன் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இறுதிப்போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ஷ்ரேயாஸ் 4 ரன்னுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 81/3 என சரிவை சந்தித்த நிலையில், விராட் கோலி - கே.எல்.ராகுல் இணை நிதானமாக ஆடினர். தொடர்ந்து அரைசதம் விளாசிய விராட் கோலி 54 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னர் வந்த ஜடேஜா 9 ரன்னுக்கு வெளியேறினார்.
தற்போது வரை 40 ஓவர்களுக்கு இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 65 ரன்களுடனும், சூரியகுமார் 8 ரன்னுக்கும் ஆடி வருகின்றனர். இந்த போட்டியின் போது, பாலஸ்தீன கொடி அச்சிடப்பட்ட முகமூடியையும், பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை நிறுத்தவேண்டும் என்று அச்சிடப்பட்ட ஆடையையும் அணிந்து ஒரு நபர் விராட் கோலி அருகே சென்று அவரை கட்டிப்பிடித்தார்.
சிறிது நேரத்தில் மைதான பாதுகாவலாளர்கள் அங்கு வந்து அந்த நபரை இழுத்துச் சென்றனர். பின்னர் அவர் குஜராத் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் காரணமாக மைதானத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .