இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலககோப்பை தொடர் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. பேட்டிங்க்கு சொர்கபுரியாக கருதப்படும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாகிஸ்தான் அணி நியூஸிலாந்து அணியை சந்தித்தது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கான்வே 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரச்சின் ரவீந்திரா - வில்லியம்சன் ஜோடி சிறப்பாக ஆடியது. இந்த தொடரில் ஏற்கனவே 2 சதங்கள் அடித்துள்ள ரச்சின் ரவீந்திரா இந்த போட்டியிலும் சதமடித்து சச்சினின் சாதனையை முறியடித்தார்.
வில்லியம்சன் 95 ரன்களுக்கும், ரச்சின் ரவீந்திரா 108 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இறுதிக்கட்டத்தில் நியூசிலாந்து அணியின் இறுதிக்கட்ட வீரர்கள் அதிரடியாக ஆட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து அணி 401 ரன்களை குவித்தது.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷபிக் 4 ரன்களிலேயே ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம், பஹர் ஸமானுடன் ஜோடி சேர்ந்தார். இந்த போட்டியில் சிக்ஸராக விளாசிய பஹர் ஸமான் 63 பந்துகளில் சதமடித்து உலகக்கோப்பையில் அதிவேகமாக சதமடித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
முதலில் இந்த மழை குறுக்கிட்ட காரணத்தால். 1 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணி 25.3 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை சேர்த்திருந்தபோது மீண்டும் மழை செய்தது. இதன் காரணமாக ஆட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்ட காரணத்தால், டக்வொர்த் லூயிஸ் முறைபடி வெற்றியாளரை தேர்வு செய்ய முடிவுஎடுக்கப்பட்டது .
இதில் 25.3 ஓவரில் எடுத்திருக்கவேண்டிய ரன்களை விட பாகிஸ்தான் அணி 21 ரன்கள் அதிகம் எடுத்த காரணத்தால் அந்த அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. 126 ரன்களை குவித்த பஹர் ஸமான் இந்த போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் வென்றதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை பாகிஸ்தான் அணி தக்கவைத்துக்கொண்டது. அதே நேரம் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவிய காரணத்தால் தென்னாபிரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த தோல்வியின் மூலம் தான் ஆடிய இறுதி 4 போட்டிகளில் நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவியுள்ளது.