4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.
தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானை முதல் முறையாக வீழ்த்தி அசத்தியது. மேலும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக 8 போட்டிகளில் ஆடியுள்ள ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது.
இந்த தோல்வியை பாகிஸ்தான் ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன. இது குறித்து பாகிஸ்தான் ஊடகங்களில் வந்த செய்திகளில், பாகிஸ்தான் அணி வெற்றிக்காக எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை, வீரர்களிடையே எனர்ஜி இல்லை, விருப்பமும் இல்லை, அணுகுமுறையும் இல்லை, எதுவும் புலப்படவில்லை. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே வீரர்கள் சோம்பலாக காணப்பட்டனர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.
மேலும், அணியின் பீல்டிங்கிலும் சிக்கல் உள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பீல்டிங் செய்யும் போது அணியின் செயல்திறன் சராசரிக்கும் குறைவாக இருந்தது. இது வீரர்களின் உடற்தகுதி குறித்த கேள்விகளை எழுப்புகிறது.பாகிஸ்தான் அணியின் பீல்டிங் ஒரு உள்ளூர் கிரிக்கெட் கிளப்பையும் விட மோசமாக இருந்தது. எனக் காட்டமாக விமர்சிக்கப்பட்டது.
அதோடு, பாகிஸ்தான் தனது சொந்த அணியையே மோசமாக்கிக் கொண்டதாகவும், அதற்காக இப்போது பெரும் விலையை செலுத்தியுள்ளது. கடைசி கட்டத்திற்கு தகுதி பெற பாகிஸ்தான் தனது சொந்த அதிர்ஷ்டத்தை நம்பி இருக்க முடியாது, தனது செயல்திறன் மூலம் முன்னேற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதே போல, இந்த உலகக் கோப்பையில் இந்தியா சிறந்த அணி என்பது தெளிவாகியிருக்கிறது. ஆனால் பாகிஸ்தானும் மோசமான அணியாக பார்க்கப்படவில்லை. பாகிஸ்தானும் ஒரு நல்ல தொடக்கத்தை எடுத்தது. ஆனால், ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுடனான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் பல பலவீனங்கள் அம்பலமானது என்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் அந்த அணியை விமர்சித்துள்ளன.