கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.
இந்த சூழலில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பைத்தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. எனினும், ஆசிய கோப்பை தொடரை வேறு பொதுவான இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.
இது குறித்த சர்ச்சை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வந்த நிலையில், பிசிசிஐ-யின் பணபலத்துக்கு இதர ஆசிய அணிகளும் ஆதரவு தெரிவித்த நிலையில், இறுதியில் பாகிஸ்தான் இறங்கி வந்தது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ஆசிய கோப்பைக்கான அட்டவணையில், ஒன்பது ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட உள்ள நிலையில், வெறும், நான்கு ஆட்டங்கள் மட்டுமே பாகிஸ்தானில் நடைபெறவுள்ளன.
அதன்படி இலங்கையில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர் நடைபெற்ற இந்தியா -நேபாளம் போட்டியிலும் மழை குறிக்கிட்டதால் ஆட்டத்தின் ஓவர்கள் குறைக்கப்பட்டது. அதோடு இன்னும் மீதம் இருக்கும் போட்டிகளும் மழையால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலையில், சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆசிய கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ரிசர்வ் டே-வில் இந்த போட்டி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எந்த ஒரு தொடரிலும் அனைத்து அணிகளுக்கும் நடுநிலையாக இருக்கவேண்டியது அந்த போட்டியை நடத்தும் அமைப்பின் கடமையாகும். ஆனால், வணிகத்தை முக்கிய காரணமாக கொண்டு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் இந்த அறிவிப்புக்கு விளையாட்டு ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இருக்கும் நிலையில், அங்கும் தனது பணபலத்தால் ஒருதலை பட்சமாக நடப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பாகிஸ்தானில் நடைபெறவிருந்த ஆசிய கோப்பை போட்டி, பிசிசிஐயின் அழுத்தம் காரணமாக 70 % போட்டிகள் இலங்கையில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.