பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் சில வாரங்களுக்கு முன்னர் ஆசிய கோப்பைக்கான அட்டவணை வெளியானது. அதில், ஒன்பது ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்பட உள்ள நிலையில், வெறும், நான்கு ஆட்டங்கள் மட்டுமே பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது சர்சையானது.
அதனைத் தொடர்ந்து நேற்று 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது கடந்த 30-ம் தேதி பாகிஸ்தான் நாட்டின் முல்தான் நகரில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று தொடரின் மிகமுக்கிய போட்டியான இந்தியா பாகிஸ்தான் அணிகள் இலங்கை பல்லக்கலே மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ரோஹித் சர்மா 11 ரன்களுக்கும், கோலி 4 ரன்களுக்கும், அடுத்து நீண்ட நாட்களுக்கு பின்னர் களமிறங்கிய ஷ்ரேயாஸ் அய்யரும் 14 ரன்களுக்கு வெளியேறினார். தொடர்க வீரர் கில்லும் 10 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
இதனால் இந்திய அணி, 66 ரன்களுக்கே 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. அபாரமாக ஆடிய இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். பின்னர் கிஷன் 82 ரன்களுக்கும், ஹர்திக் பாண்டியா 87 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
பின் வரிசை வீரர்களும் தங்கள் விக்கெட்டுகளை விரைவில் இழக்க இந்திய அணி 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்க வந்தநிலையில், மழை பெய்து ஆட்டம் தொடரமுடியாத காரணத்தால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரண்டு அணிகளுக்கும் ஒரு புள்ளி வழங்கப்பட்டது. பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் நேபாளத்தை வீழ்த்தியிருந்ததால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்தியா அடுத்த போட்டியில் நேபாளம் அணியை சந்திக்கவுள்ளது.