காலம் காலமாக கால்பந்தில் ஐரோப்பிய மற்றும் தென்னமெரிக்கா நாடுகளே கோலோச்சுகின்றன. இந்த இரு கண்டத்தில் இருக்கும் பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய அணிகளே இதுவரை உலகக்கோப்பைகளை வென்றுள்ளன. அதோடு போர்த்துக்கல், நெதர்லாந்து, பெல்ஜியம் என ஐரோப்பிய நாடுகளே உலகக்கோப்பையை கோப்பையை வெல்லாவிட்டாலும், கால்பந்து அரங்கில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
கிரிக்கெட்டில் தற்போது எப்படி ஐபிஎல் போன்ற லீக் தொடர்கள் ஆதிக்கம் செலுத்துகிறதோ, அதேபோல கால்பந்து அரங்கில் பல தசாப்தங்களாக தனியார் கிளப் அணிகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதிலும் ஐரோப்பிய நாடுகளின் தனியார் கால்பந்து கிளப்களே ஃபிபா எனப்படும் சர்வதேச கால்பந்து சங்கத்தை விட ஆதிக்கம் செலுத்துகின்றன.
அந்த வகையில் இங்கிலாந்தில் நடக்கும் பிரீமியர் லீக் தொடர், ஸ்பெயினில் நடக்கும் லா லிகா, இத்தாலியில் நடக்கும் சீரி ஏ, ஜெர்மனியில் நடக்கும் புன்டஸ்லிகா கிளப் தொடர்களே உலகில் மாபெரும் கால்பந்து தொடர்களாக இருக்கின்றன. பொருளாதார ரீதியாகவும், கால்பந்தின் தரத்திலும் இந்த லீக் தொடர்கள் உலகின் உச்ச நிலையில் இருப்பதால் இந்த லீக்கில் இடம்பெற்றுள்ள கிளப்களில் விளையாடவே உலகின் முக்கிய வீரர்கள் விரும்பி வந்தனர். மேலும் உலகின் சிறந்த வீரர்கள் தேர்ந்தெடுக்கும் கால்பந்து கிளப்களாக இவை விளங்கி வந்தன.
இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் உள்ள கிளப்கள் வீரர்களுக்கு பணத்தை வாரி இறைத்ததால் ஐரோப்பிய கிளப்களில் இருந்த வீரர்கள் சீன கிளப்களில் இணைந்து விளையாடத்தொடங்கினர். மேலும், வயதில் காரணமாக மதிப்பை இழந்த முன்னணி கால்பந்து வீரர்களின் சீன கிளப்களில் இணைந்தனர்.
இதன் காரணமாக விரைவில் சீன கிளப்கள் டாப் ஐரோப்பிய கிளப்களுக்கு போட்டியாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் சீன கால்பந்து லீக்கில் தரமான உள்ளூர் கால்பந்து வீரர்களுக்கு ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக அந்த லீக் உலகளவில் பிரபலமடையாத நிலை ஏற்பட்டது. மேலும் சீன கிளப்களால் முன்னணி வீரர்களுக்கு தொடர்ந்து அதிக ஊதியம் வழங்க முடியாததால் விரைவில் சீன கிளப்கள் தங்கள் கவர்ச்சியை இழந்தன.
இதனால் மீண்டும் ஐரோப்பிய டாப் கிளப்களுக்கு போட்டியே இல்லாத நிலை ஏற்பட்டது. இதனிடையே கால்பந்து கிளப்களில் செய்யும் முதலீடு உயரிய வருமான வாய்ப்பாகவும், நீண்ட காலத்து முதலீடாகவும் கருதப்பட்டதால் வளைகுடா நாடுகளை சேர்ந்த பில்லியனர்களின் கவனம் ஐரோப்பிய கிளப்களின் மீது திரும்பியது.
இதனைத் தொடர்ந்து பிரீமியர் லீக் கிளப்பான மான்செஸ்டர் சிட்டி கிளப்பில் அபு தாபியை சேர்ந்த யுனைடெட் குழுமம் பெரும் தொகையை முதலீடு செய்து முக்கிய வீரர்களை பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இதே போல பிரான்சின் லீக் 1 தொடரில் பங்கேற்கும் PSG அணியை, கத்தாரின் அமீர் ஹமாத் அல் தாமி வாங்கினார். மேலும் அதில் பல மில்லியன் டாலர் தொகை முதலீடு செய்யப்பட்டு நெய்மார், எம்பாபே, மெஸ்ஸி போன்ற முக்கிய வீரர்கள் வாங்கப்பட்டனர்.
அதே போல கடந்த ஆண்டு பிரீமியர் லீக் கிளப்பான, நியூகேஸில் யுனைடெட் அணியை சவுதி அரேபிய பொது முதலீட்டு நிதியம் பல மில்லியன் தொகைக்கு கையகப்படுத்தியது. இவ்வாறு வளைகுடா நாடுகளை சேர்ந்த பணக்காரர்கள் கால்பந்து கிளப்களில் அதிக அளவு முதலீடு செய்தது பரபரப்பாக பேசப்பட்டது. இதே காலத்தில் வளைகுடா நாடான கத்தார் பெரும் பொருள்செலவில் கால்பந்து உலகக்கோப்பையை நடத்தியது.
இப்படி வளைகுடா நாடுகள் ஆர்வமுடன் கால்பந்தில் முதலீடு செய்வது கால்பந்து உலகில் வளைகுடா நாடுகளின் ஆதிக்கத்தை அதிகரித்தது. மேலும், பெட்ரோலிய வளத்தை மட்டுமே இனி வளைகுடா நாடுகள் நம்பியிருக்கப்போவதில்லை என்பதையும் உணர்த்தியது.
இந்த சூழலில் சவூதி அரேபியா தங்கள் நாட்டு கால்பந்தை உலக அரங்கில் எடுத்துச்செல்லும் விதமாக தங்கள் நாட்டில் நடக்கும் சவுதி ப்ரோ லீக்கின் முக்கிய அணிகளில் சவூதி அரேபியா அரசே முதலீடு செய்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் சவுதி ப்ரோ லீக் அணிகளான அல்- அக்லி, அல்- இத்திகாட், அல்- ஹிலால், அல்- நாசர் ஆகிய அணிகளில் சவூதி அரேபிய அரசு முதலீடு செய்தது.
இதனைத் தொடர்ந்து உலகின் பிரபல கால்பந்து வீரரான ரொனால்டோவை 213 மில்லியன் அமெரிக்க டாலருக்கு அல்- நாசர் அணி ஒப்பந்தம் செய்து உலகையே திரும்பி பார்கவைத்தது. இதன் பின்னர் மானே, பென்சிமா, பிர்மினோ, ரூபன் நெவாஸ் , காண்டே, கூலிபாளி, கேசி, பபோனா, பேபினோ போன்ற முக்கிய வீரர்கள் அல்- அக்லி, அல்- இத்திகாட், அல்- ஹிலால், அல்- நாசர் ஆகிய அணிகளால் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
சில நாடுகளுக்கு முன்னர் கூட அல்- ஹிலால் அணிக்காக பிரபல வீரர் நெய்மார் 173 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படி சவுதி ப்ரோ லீக்கில் ஐரோப்பிய டாப் கிளப்பில் ஆடிய வீரர்கள் தொடர்ந்து இணைந்து வருவது கால்பந்து உலகத்தின் துருவத்தையே மாற்றியுள்ளதாக கூறப்பட்டது. அதே நேரம் சவுதி ப்ரோ லீக்கில் தரம் இல்லை, அதில் இணையும் வீரர்கள் பணத்துக்காகவே அதில் சேர்க்கிறார்கள் என்றும் விமர்சனமும் வைக்கப்படுகிறது.
ஏனெனில், சவுதி ப்ரோ லீக்கில் 18 அணிகள் இருக்கும் நிலையில், அதில் 4 கிளப்களில்தான் முன்னணி வீரர்கள் இணைந்துள்ளனர். பிற அணிகளில் எந்த முன்னேற்றமும் இல்லாத சூழல் நிலவுகிறது. இதனை குறிப்பிட்டே சவுதி ப்ரோ லீக்கில் தரம் இல்லை என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது. மேலும், அந்த அணியில் ஆடும் வீரர்களும் சர்வதேச அளவில் சுமாரான வீரர்களாகவே இருக்கின்றனர்.
அதே நேரம் தொடர்ந்து இப்படி முன்னணி வீரர்கள் சவுதி ப்ரோ லீக்கில் இணைந்தால் அதன் மூலம், பிற அணிகளிலும் முக்கிய வீரர்கள் இடம்பெறலாம் என்பதால் வரும் காலத்தில் சவுதி ப்ரோ லீக் ஐரோப்பிய முன்னணி கால்பந்து கிளப்களுக்கு சவால் விடும் என்றும் அதனை ஆதரிப்பவர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால், ஐரோப்பிய கிளப்கள் இந்த அளவு வலுவுடன் இருக்க முக்கிய காரணமாக அதன் அகாடெமி அணிகள் திகழ்கின்றன. மேலும் உள்நாட்டில் திறமையான இளம் வீரர்கள் அங்கு இருப்பதால் குறைந்த முதலீட்டிலேயே உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் அந்த கிளப்களுக்கு கிடைக்கின்றன. ஆனால், சவுதி ப்ரோ லீக் கிளப்கள் பல மில்லியன் செலவு செய்தால் மட்டுமே சிறந்த வீரர்கள் அந்த அணிகளுக்கு கிடைக்கிறார்கள் என்பதால் வருடம்தோறும் அந்த அணி நிர்வாகம் ஏராளமான பணத்தை பல ஆண்டுகளுக்கு வீரர்கள் மேல் முதலீடு செய்யவேண்டி இருக்கும். ஒரு வேளை தொடர்ந்து வீரர்கள் மேல் முதலீடு செய்ய முடியவில்லை என்றால் அதன்பின்னர் சவுதி ப்ரோ லீக் தனது மதிப்பை இழந்து விடும்.
இதனால் சவுதி ப்ரோ லீக்கின் எதிர்காலம் என்பது அதில் அரசு முதலீடு செய்யும் தொகையே வைத்தே இருப்பதால் அது ஐரோப்பிய டாப் லீக்குகளுக்கு நீண்ட கால போட்டியாக இருக்காது என விளையாட்டு விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் , தற்போது சவுதி ப்ரோ லீக்குக்கு உலகளவிலான ஸ்பான்சர்களும், ஒளிபரப்பு உரிமையும் கிடைத்து வருவதால் அரசு சார்பு இன்றியும் சவுதி ப்ரோ லீக் கிளப்கள் வருமானம் ஈட்டும் வாய்ப்பும் இருக்கிறது. இதனால் ஒரு காலத்தில் அதீத முதலீடு செய்த சீனா கிளப்களின் நிலையும் சவுதி ப்ரோ லீக்குக்கு வரலாம், அல்லது ஐரோப்பிய லீக்குகளுக்கு போட்டியாகவும் சவுதி ப்ரோ லீக் வரலாம் என்ற நிலையே தற்போது நிலவுகிறது.