5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.
தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பைக்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டது. அதன்படி இந்த தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ள நிலையில், இந்திய அணியின் முக்கிய வீரர்கள் காயத்தால் அடிக்கடி பாதிக்கப்படுவது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இவர்களுக்கு மாற்றாக பல்வேறு வீரர்களை இந்திய அணி நிர்வாகம் சோதித்து வருகிறது.
அந்த வகையில், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் 4-வது இடத்துக்கு சஞ்சு சாம்சன் பொருத்தமானவராக இருப்பார் என இந்திய அணி முன்னாள் வீரர் முகமது கைப் கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "இந்திய அணியின் மிடில் ஆர்டரில் பிரச்சனை இருக்கிறது. பேட்டிங் ஆர்டரில் 4-வது இடத்தில் இஷான் கிஷனையோ அக்சர் பட்டேலையோ அனுப்புவது நல்ல யோசனையாக இருக்காது. அந்த இடத்துக்கு ஸ்பின் வீசும் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடக்கூடிய சஞ்சு சாம்சன் பொருத்தமாக இருப்பார். அதை அவர் பலமுறை நிரூபித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் அணிக்கு என்ன தேவை என்பதை அறிந்து அவர் ஆடினார். உலகக்கோப்பையில் இடம் கிடைக்குமா என அழுத்தத்தோடு விளையாடினாலும், அற்புதமான பேட்டிங் திறமையை அவர் அந்த தொடரில் வெளிப்படுத்தினார்" என்று கூறியுள்ளார்.