இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், கங்குலி-க்கு பிறகு அடுத்து நட்சத்திர வீரராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது தனது அமைதியாலும், அதிரடி ஆட்டத்தாலும் அந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தவர்தான் எம்.எஸ்.தோனி. இந்திய அணியில் இப்படி ஒரு வீரரா என பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், சச்சின் அவுட் ஆனால், இந்திய அணி தோற்றுவிடும் என கருதப்பட்ட நிலையையம் மாற்றிக்காட்டினார்.
அதனால் எம்.எஸ்.தோனி களத்திலிருந்தால் அது எவ்வளவு பெரிய ரன்னாக இருந்தாலும் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையைப் இந்திய ரசிகர்களுக்கு விதைத்தார். அதன்பின்னர் இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.
இவர் கேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார்.பெரும்பாலும் இந்த தொடர்தான் அவரின் இறுதி ஐபிஎல் தொடராக இருக்கும் என கருதப்படுவதால் சென்னை அணி விளையாடும் இடங்களில் எல்லாம் தோனிக்கு ஆதரவாக ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தோனி என்னைப்போல் பல மில்லியன் மக்களுக்கு ஹீரோவைப்போல் காணப்படுகிறார் என இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "தோனி எனக்கான வழிகாட்டியாக திகழ்ந்தார். அவரைப் பார்த்துதான் நான் இப்போது இந்த நிலைக்கு வந்துள்ளேன். அவர் என்னைப்போல் பல மில்லியன் மக்களுக்கு ஹீரோவாக இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக "என்னுடைய ஹீரோ மற்றும் உலகம் முழுவதும் இன்னும் பல மில்லியன் மக்களின் ஹீரோவான உங்களுக்கு வாழ்த்துகள். சர்வதேச கிரிக்கெட்டில் உங்களுக்கு எதிராக விளையாடியது எனக்கான மரியாதையாக கருதுகிறேன்" என்று ஜோஸ் பட்லர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.