ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி ஒரு கட்டத்தில் 91-1 என்ற நல்ல நிலையில் இருந்தது.
ஆனால், ஒரே ஓவரில் இந்திய வீரர் அஸ்வின் உலகின் நம்பர் 1 வீரர் லபுசேனையும் உலகின் நம்பர் 2 வீரர் ஸ்மித்தையும் அடுத்தடுத்து வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். எனினும் ஆஸ்திரேலிய அணியில் கவாஜா மற்றும் ஹன்ட்ஸ்காப் ஆகியோர் சிறப்பாக ஆடியதால் அந்த அணி 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் சமி 4 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 137-7 என்ற பரிதாப நிலையில் இந்திய அணி இருந்தது. ஆனால், பின்னர் ஜோடி சேர்ந்த அக்சர் படேல் -அஸ்வின் இணை 114 ரன்கள் குவித்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. இறுதியில் இந்திய அணி 262 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.பின்னர் இரண்டாம் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி வெறும் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.ஜடேஜா 7 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.இந்த போட்டியில் ஜடேஜாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்தபோது அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்கள் கொண்ட பாகிஸ்தானில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியதால் அடுத்து அதே போன்ற மைதானங்கள் கொண்ட இந்தியாவிலும் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இங்கு மிக மோசமாக ஆஸ்திரேலிய அணி ஆடிவருகிறது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா இந்தியாவைப் போல சுழலுக்கு சாதகமான மைதானம் அமைத்து எதிரணிகளை தோற்கடிக்கும் எங்கள் முயற்சி வெற்றி பெறவில்லை என கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "இந்திய தொடரில் ஆஸ்திரேலியா அணியின் தோல்வி ஒரு காலத்தில் பெர்த், பிரிஸ்பென் மைதானங்களில் அவர்கள் ஆசிய அணிகளை தோற்கடித்த விதத்தை போல இருக்கிறது. ஆனால் தற்போது காலம் மாறியுள்ளது.
இந்தியாவில் தரமான டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட போதிய அளவுக்கு ஆஸ்திரேலியா தயாராகவில்லை என்பதையே அவர்களின் இந்த மோசமான தோல்வி காட்டுகிறது.சுழல் பந்து வீச்சுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் பேட்டிங் படுமோசமாக இருக்கிறது. ஜடேஜா, அஸ்வினின் பந்துவீச்சுக்கு ஆஸ்திரேலியாவிடம் பதில் இல்லை. மொத்தத்தில் இந்தியாவை சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் தோற்கடிப்பது அசாத்தியமாகி விட்டது. பாகிஸ்தானும் இதே போல சுழலுக்கு சாதகமான மைதானங்களை அமைத்து எதிரணியை தோற்கடிக்க முயற்சித்தது. ஆனால் அது நடைபெறவில்லை" எனக் கூறியுள்ளார்.