மத்திய தரைக்கடல் பகுதியில் ஐரோப்பாவையும், ஆசியாவையும் இணைக்கும் இடத்தில துருக்கி நாடு அமைந்துள்ளது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் இந்த பகுதியில் கடந்த 6-ம் தேதி அந்நாட்டு நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு காசியானதெப் எனும் இடத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் நொடியில் தரைமட்டமான நிலையில், இடிபாடுகளில் ஏராளமான பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். அதிகாலை நேரம் என்பதால் ஏராளமானோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் இந்த நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்டனர்.பூமிக்கு அடியில் 17.9 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி தற்போது வரை 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி - சிரியா எல்லை அருகே அமைந்துள்ளதால் சிரியா நாட்டிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் லெபனான், சிரியா, ஸைப்ரஸ், இஸ்ரேல் உள்பட்ட நாடுகளில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அதே நாளில் இந்திய நேரப்படி மாலை 3.54 அளவில் 7.5 என்ற ரிக்டர் அளவுகோலில் மீண்டும் அங்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் தற்போது வரை அங்கு சிறிய அளவில் நிலநடுக்கம் தொடர்ந்து கொண்டிருப்பதால் ஏற்கனவே சேதமடைந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்து வருகிறது.
இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த இடிபாடுகளில் சிக்கி கானா நாட்டை சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு என்பவர் உயிரிழந்துள்ளார். துருக்கி கிளப் அணியில் ஆடிவந்த இவர் முன்னர் உலகப்புகழ்பெற்ற செல்சி, எவர்ட்டன், நியூகாஸ்டில் ஆகிய அணிகளுக்காகவும் ஆடியுள்ளார்.
இவரின் உடல் தேசியக்கொடி போர்த்தப்பட்ட நிலையில், கானாவுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு அவருக்கு துணைஅதிபர் முன்னிலையில் ராணுவமரியாதை வழங்கப்பட்டது. இதற்கு முன்னர் துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி துருக்கி கால்பந்து வீரர் அஹ்மத் ஐயுப் என்பவரும் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.