கிட்டத்தட்ட உலகத்தின் பாதி மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் வரும் 20-ம் தேதி கோலாகலமாக மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் தொடங்கவுள்ளது. ஆசியாவில் நடக்கும் இரண்டாவது கால்பந்து உலகக்கோப்பை தொடராகவும், மத்திய கிழக்கு பகுதியில் நடக்கும் முதல் கால்பந்து உலகக்கோப்பை தொடராகவும் இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த உலகக்கோப்பை இந்தியாவிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இன்னும் இந்த உலகக்கோப்பை பங்கேற்பை குறித்து இந்திய ரசிகர்களால் வெறும் கனவு மட்டுமே காணமுடிகிறது. 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை இருந்தாலும் உலகக்கோப்பை கால்பந்தில் இந்திய அணி 100-வது இடத்துக்கும் வெளியே உள்ளது.
ஆனால், ஒரு காலத்தில் கால்பந்தில் இந்தியா உலக அரங்கில் அதகளப்படுத்திய காலமும் இருந்தது என்பதே பலருக்கு தெரியாத ஒரு சோக வரலாறுதான். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா தகுதி பெற்றது ஒரே ஒரு முறைதான். 1950-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற கால்பந்து தொடரில் ஆசிய கண்டத்தில் இருந்து பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, பர்மா ஆகிய அணிகள் தகுதி சுற்றில் இருந்து விலகியதால்தான் இந்தியாவுக்கு அதில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால், பூட்ஸ் இல்லாமல் வெறும்காலில் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால் அந்த தொடரில் இந்திய அணி பங்கேற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆனால் அதே காலத்தில் வெறும் காலில் இந்திய அணி பல சாதனைகளை படைத்தது மறுக்கமுடியாத ஒரு பொற்காலம். அந்த காலத்தில் ஆசிய கண்டத்தில் இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்தது.
1951-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் வெறும்காலில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. உலகஅரங்கில் 1952-ல் பின்லாந்தின் ஹெல்சிங்கி நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய அணி வெறும்காலில் பங்கேற்றது. அதில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து இந்திய அணியில் வெறும் காலில் விளையாடுவது தடை செய்யப்பட்டது.
தொடர்ந்து 1956-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய கால்பந்து அணி 4-வது இடம்பிடித்து அசத்தியது. அதோடு 1962-ம் ஆண்டு ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் இறுதிப்போட்டியில் தென்கொரியாவை வீழ்த்திய இந்திய அணி தங்கம் பதக்கம் வென்றது. அதோடு இந்திய கால்பந்தின் பொற்காலமும் முடிவுக்கு வந்தது.
அதன்பின்னர் வடகிழக்கு, ,மேற்குவங்கம்,கோவா, கேரளா,வடசென்னை என சில இடங்களில் இந்திய கால்பந்து உயிரோட்டமாக இருந்தாலும் பிறஇடங்களில் அதற்கு போதிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை. அதோடு 80களில் கிரிக்கெட் விளையாட்டில் இந்தியாவின் எழுச்சிக்கு பின்னர் கால்பந்து பல இடங்களில் மறக்கப்பட்டே போனது. அதிலும் இந்திய கால்பந்தின் பொற்காலம் கூட மறக்கப்பட்டதுதான் கொடுமையிலும் கொடுமை.