விராட் கோலிக்கு இப்போது 33 வயது ஆகிறது. இன்னும் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு அவரால் கிரிக்கெட் விளையாட முடியும். முன்னாள் இந்திய கேப்டனான விராட் கோலி, மஹேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே இந்திய கிரிக்கெட்டின் முகமாக மாறிவிட்டார். பேட்டிங்கின் உச்சத்தைத் தொட்டிருந்த அவர், இந்திய அணியின் மிகச் சிறந்த டெஸ்ட் கேப்டனாகவும் உருவெடுத்தார். ஒரு மிகப்பெரிய சகாப்தமாக விளங்கிய கோலியின் சாதனைகளை சமன் செய்வது சாதாரண விஷயமாக இருக்கப்போவதில்லை. ஒவ்வொரு போட்டியிலும் ஒன்று சாதனைகளை உடைக்கிறார், இல்லை புதிதாக சாதனைகள் படைக்கிறார் கோலி.
ஆனால் எல்லா நல்ல விஷயங்களையும் போலவே கோலியின் கிரிக்கெட் கரியரும் ஒருநாள் முடிவுக்கு வரும். அப்படி ஓய்வு பெறும்போது அவர் எப்படி விடைபெறுவார் என்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். கடந்த 2 ஆண்டுகளும் கோலிக்கு சிறப்பாக அமையவில்லை. கிட்டத்தட்ட 1020 நாள்கள் அவர் சர்வதேச அரங்கில் சதம் அடிக்காமல் தடுமாறி வந்தார். ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் அதை முடிவுக்குக் கொண்டுவந்தார் கோலி. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தன்னுடைய முதல் சர்வதேச டி20 சதத்தையும், ஒட்டுமொத்தமாக தன்னுடைய 71வது சர்வதேச சதத்தையும் பதிவு செய்தார் அவர்.
கோலியின் எதிர்கால ஓய்வு பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, கோலி ஓய்வு பெறும் போது தன் கரியரின் உச்சத்தில் இருக்க வேண்டும் என்றும், அதற்கு மாறாக அவர் தடுமாறிக்கொண்டிருக்கும் ஒரு வீரராக ஓய்வு பெற்றுவிடக் கூடாது என்றும் கூறியிருக்கிறார்.
"விராட் கோலி கிரிக்கெட் விளையாடிய விதம் அதி அற்புதமானது. அவர் கரியரின் ஆரம்ப காலத்தில் அவர் தடுமாறவே செய்தார். ஆனால், அதன் பிறகு தனக்கென்று ஒரு பெயரை சம்பாதித்துக்கொண்டார். அவர் ஒரு சாம்பியன் வீரர். இந்த சாம்பியன் வீரரின் கரியருக்கும் ஓய்வு வரும். ஆனால் அப்படி அவர் ஓய்வு பெறும்போது நல்ல முறையில் அதே சாம்பியனாக விடை பெறவேண்டும்" என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் ஷாஹித் அப்ரிடி.
டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான போட்டிகளிலும் விளையாடிக் கொண்டிருக்கும் கோலி, சீக்கிரமே ஏதோவொரு ஃபார்மட்டில் இருந்து ஓய்வு பெறக்கூடும். இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது போல், மற்ற 2 ஃபார்மட்களிலும் கவனம் செலுத்துவதற்காக கோலியும் அதைப் பின்பற்றலாம். இந்திய துணைக் கண்டத்தைச் சார்ந்த முன்னணி வீரர்கள் யாரும் சரியான நேரத்தில் ஓய்வு பெற்றதில்லை. பலரும் விமர்சனங்களுக்குப் பிறகே ஓய்வை அறிவித்தனர். கோலி அதற்கு விதிவிலக்காக அமைவார் என்று விரும்புகிறார் அப்ரிடி.
"அவரை அணியில் இருந்து வெளியேற்றும் வரை காத்திருக்கக் கூடாது. அவர் மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கும்போதே ஓய்வு பெற்றுவிடவேண்டும். அது அதிகம் நடப்பதில்லை. அதிலும் குறிப்பாக ஆசியாவைச் சேர்ந்த வீரர்கள் மிகச் சொற்பமாகவே அந்த சரியான முடிவை எடுக்கிறார்கள். ஆனால் விராட் கோலி அதை தன்னுடைய ஸ்டைலில் சரியான தருணத்தில் அறிவிப்பார்" என்று கூறியிருக்கிறார் அப்ரிடி.