உலக அளவில் புகழ்பெற்ற காமென்வெல்த் விளையாட்டுத் தொடர் லண்டனில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு வீரர்களும் இங்கிலாந்து, பிர்மிங்கம் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த காமன்வெல்த் தொடரில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்ற இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினாவும் கலந்து கொள்கிறார்.
இதனால் இவர் தனது பயிற்சியாளர்களுடன் இங்கிலாந்து சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் காமன்வெல்த் போட்டி நடத்தும் நிர்வாகத்தின் மீது இந்திய வீராங்கனை லவ்லினா பரபரப்பைக் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
இது குறித்து வீராங்கனை லவ்லினா தனது ட்விட்டர் பக்கத்தில்," எனது பயிற்சியாளர் வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால் போட்டி தொடங்க உள்ள சில நாட்கள் உள்ள நிலையில் எனது பயிற்சி முழுமையாக நின்று விட்டது. மற்றொரு பயிற்சியாளரும் இந்தியா திரும்பி விட்டார்.
இதனால் இந்த தொடரை எப்படி எதிர்கொள்வது என தெரியவில்லை. மனரீதியாக நான் துன்புறுத்தப்பட்டு வருகிறேன். கடந்த முறை நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் இதே நிலையைத்தான் நான் எதிர்கொண்டேன். இந்த கஷ்டங்களை எல்லாம் கடந்து நான் பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது" என தெரிவித்துள்ளார்.