இந்தியாவில் 2008ம் ஆண்டு முதல் ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை 15 ஐ.பி.எல் தொடர்கள் நடைபெற்றுள்ளது. இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டும் இல்லாமல் உலக நாடுகளில் உள்ள மற்ற கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகிறனர்.
மேலும் ஒவ்வொரு தொடரின்போது ஐ.பி.எல் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே சூதாட்ட சர்ச்சையால் ஐ.பி.எல் தொடரில் தடை செய்யப்பட்டிருந்தது.
அதேபோல் வீரர்களும் பெட்டிங் செய்து விளையாடுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் ஒவ்வொரு தொடர் முடியும் போதும் வைக்கப்படும். இந்த புகாரில் பல வீரர்களும் சிக்கியுள்ளார்.
ஆனால் இந்த சம்பவத்தை எல்லாம் மிஞ்சும் அளவிற்குக் குஜராத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது கிரிக்கெட் உலகையே அதிரவைத்துள்ளது.
குஜராத் மாநிலம், மொலிபூர் கிராமத்தில் 21க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி ரஷ்ய சுதாட்டக்காரர்களை ஏமாற்றுவதற்காக போலியாக ஐ.பி.எல்தொடர் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இதற்கு என்று இவர்கள் ஐ.பி.எல் போட்டியில் அணியும் உடையை அணிந்து கொண்டும், பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவைப் போன்று ஒருவரை ஆடுகளத்தில் நிற்கவைத்துள்ளனர். மேலும் காலிறுதிவரை போலி ஐ.பி.எல் போட்டியை நடத்தியுள்ளனர்.
போட்டியைப் பார்ப்பவர்களுக்கு எவ்விதமான சந்தேகமும் எழுந்துவிடக் கூடாது என்பதற்காக ஹர்ஷா போக்லே குரலில் மிமிக்கிரி செய்து கமெண்டரியும் கொடுத்து வந்துள்ளனர்.
அதேபோல் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி கிரிக்கெட் மைதானத்தில் எரியும் விளக்குகளை காண்பித்து ரசிகர்கள் இருப்பதுபோலவும் காண்பித்துள்ளனர். இந்த போட்டிகளை யூடியூபில் ஸ்ட்ரீம் செய்து வந்துள்ளனர்.
இந்த போலி ஐ.பி.எல் போட்டி தொடர்பாக 4 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் ரஷ்ய சுதாட்டக்கார்கள் ரூ.3 லட்சம் வரை பணம் செலுத்தியதாகவும் போலிஸார் கூறுகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.