விளையாட்டு

3 தங்கம், 1 வெண்கலம்.. 4 பதக்கங்கள் வென்று அசத்திய வீரர்... யார் இந்த சௌரப் சௌத்ரி?

புதுடெல்லியில் நடந்த தேசிய துப்பாக்கி சுடுதல் தகுதிச் சுற்று போட்டியில் 3 தங்கம், 1 வெண்கலம் என நான்கு பதக்கங்கள் வென்று அசத்தியிருக்கிறார் சௌரப் சௌத்ரி.

3 தங்கம், 1 வெண்கலம்.. 4 பதக்கங்கள் வென்று அசத்திய வீரர்... யார் இந்த சௌரப் சௌத்ரி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

புதுடெல்லியில் நடந்த தேசிய துப்பாக்கி சுடுதல் தகுதிச் சுற்று போட்டியில் 3 தங்கம், 1 வெண்கலம் என நான்கு பதக்கங்கள் வென்று அசத்தியிருக்கிறார் சௌரப் சௌத்ரி. முன்னாள் வேர்ல்ட் நம்பர் 1 வீரரான அவர், 50 மீட்டர் பிஸ்டல் போட்டியில் சீனியர், ஜூனியர் என இரண்டு பிரிவுகளிலும் பதக்கங்கள் வென்றிருக்கிறார்.

டெல்லியில் இருக்கும் கர்னி சிங் ஷூட்டிங் ரேஞ்சில் இந்த டிரயல்ஸ் போட்டிகள் நடந்தன. T4 டிரயல்ஸில் 50 மீட்டர் பிஸ்டல் போட்டியில் ஜூனியர், சீனியர் என இரண்டு பிரிவுகளிலும் தங்கம் வென்றார் சௌரப் சௌத்ரி. அதற்கு முன்பு நடந்த T3 டிரயல்ஸில் சீனியர் பிரிவில் வெண்கலமும், ஜூனியர் பிரிவில் தங்கமும் வென்றார் இந்த முன்னாள் வேர்ல்ட் நம்பர் 1 வீரர்.

60 ஷாட்கள் கொண்ட T4 டிரயல்ஸில், 562 புள்ளிகள் எடுத்து தங்கம் வென்றார் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த சௌரப். இந்தப் போட்டியில் இந்தியன் நேவி வீரரான குனால் ராணா 555 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆண்கள் ஜூனியர் பிரிவில் 547 புள்ளிகளோடு வெள்ளிப் பதக்கம் வென்றார் பஞ்சாப் வீரர் அர்ஜுன் சிங் சீமா.

19 வயதேயான சௌரப் சௌத்ரி துப்பாக்கி சுடுதல் அரங்கில், மிகவும் கொண்டாடப்படுபவர். இளம் வயதிலேயே 8 உலகக் கோப்பை தங்கப் பதக்கங்கள் வென்றவர். ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கம் வென்றிருக்கிறார். டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட்டு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனி நபர் பிரிவில் இறுதிச் சுற்று வரை முன்னேறினார். அணிப் பிரிவிலும் மனு பாக்கருடன் இணைந்து இறுதிச் சுற்று வரை முன்னேறினார் சௌரப். இரண்டு போட்டிகளிலும் ஏழாவது இடமே கிடைத்தது. ஆனால், கூடிய விரைவில் ஒலிம்பிக் அரங்கில் இந்திய தேசியக் கொடியை அவர் பறக்கவிடுவார் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

T3 டிரயல்ஸில் 552 புள்ளிகள் பெற்ற சௌரப் சௌத்ரி, மூன்றாம் இடம் பெற்றார். அந்தப் போட்டியில் 553 புள்ளிகள் பெற்ற விமானப்படையைச் சேர்ந்த அனுபவ வீரர் கௌரவ் ராணா முதலிடம் பெற்றார். ராஜஸ்தானைச் சேர்ந்தவரான பிரகாஷ் மிதெர்வேல் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆண்கள் ஜூனியர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் T3 டிரயல்ஸில் விஜய்வீர் சித்து தங்கம் வென்றார். ஹரியானாவைச் சேர்ந்த அனிஷ் மற்றும் ஆதர்ஷ் சிங் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பெற்றனர்.

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் முன்னாள் வேர்ல்ட் நம்பர் 1 வீராங்கனையும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான இளவேனில் வாளறிவனை வீழ்த்தி முதலிடம் பெற்றார் மெஹுலி கோஷ். குஜராத் அணிக்காக விளையாடும் இளவேனில், 16-8 என்று வெற்றி பெற்று இந்த தகுதிச் சுற்றில் மூன்றாவது தங்கத்தை வென்றார் மெஹுலி கோஷ். இரண்டு நாட்களில் அவர் வெல்லும் இரண்டாவது தங்கம் இது. ஹரியானாவைச் சேர்ந்த நான்சி T4 டிரயல்ஸில், இவர்கள் இருவருக்கும் அடுத்து வந்து மூன்றாவது இடம் பிடித்தார். ஜூனியர் பிரிவில் கர்நாடகாவின் திலோத்தமா சென்-இடம் 17-7 என தோற்று தங்கத்தைத் தவறவிட்டார் நான்சி.

banner

Related Stories

Related Stories