1. லக்சயா சென் வெற்றி!
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்சயா சென், டென்மார்க்கின் விக்டர் ஆக்சல் சென்னை எதிர்கொண்டார். இதில் 21-10, 21-15 என்ற செட் கணக்கில் விக்டர் ஆக்சல்சென் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார். இந்நிலையில் லக்சயா சென்னுக்கு பிரதமர் மோடி-ராகுல் காந்தி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
2. வெஸ்ட் இண்டீஸ் -இங்கிலாந்து ஆட்டம் சமன்!
வெஸ்ட் இண்டீஸ் -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ் டவுன் நகரில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 507 ரன்கள் அடித்தது. பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 411 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை இழந்தது.இதையடுத்து தனது இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்டத்தின் கடைசி நாளான இன்று 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீசுக்கு 282 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 2வது இன்னிங்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 65 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டி சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
3. இரண்டாக உடைந்த ஸ்டம்ப்!
ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா வரும் 26ஆம் தேதி முதல் மும்பையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த முறை 10 அணிகள் பங்கேற்பதால், 2 குரூப்களாக பிரிக்கப்பட்டு புதிய தோற்றத்தில் ஐபிஎல் தொடர் நடைபெறவிருக்கிறது. இந்திய அணியில் அசத்தி வந்த நடராஜன் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். சையது முஷ்டக் அலி, விஜய் ஹசாரே போன்ற தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால், பிசிசிஐ தேர்வுக்குழுவின் கவனத்தைப் பெற முடியவில்லை. எனினும் அவர் மீது ஐதராபாத் அணி அதீத நம்பிக்கை வைத்து வாங்கியுள்ளது. டி.நடராஜன் பவுலிங் பயிற்சி செய்யும் வீடியோவை ஐதராபாத் அணி வெளியிட்டுள்ளது. அதில் வெறிகொண்டு பவுலிங் வீசும் நடராஜன் கொஞ்சம் கூட குறிமாறாமல் யார்க்கர் வீசுகிறார். மேலும் ஒரு பந்தில், ஸ்டம்ப் இரண்டாக உடைந்து பறந்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
4. சாம்பியன் ஆன டெய்லர்!
பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவின் இண்டியன்வெல்சில் நடந்து வருகின்றன. இதில் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், உலக தரவரிசையில் 4வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் மற்றும் உலக தரவரிசையில் 20வது இடம் வகிக்கும் 24 வயதுடைய டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் விளையாடினர். இவர்களில், காயத்தினால் அவதிப்பட்ட அமெரிக்க வீரரான டெய்லர் போட்டியை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற சந்தேகத்தில் இருந்துள்ளார். எனினும், இந்தப் போட்டியை தைரியமுடன் எதிர்கொண்டு விளையாடிய அவர், தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். 21 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நடாலுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் 6-3 என்ற புள்ளி கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். இதனால், 2வது செட்டை கைப்பற்றுவதில் இருவருக்கும் கடும் போட்டி ஏற்பட்டது. எனினும், அடுத்தடுத்து அதிரடியாக விளையாடி அடுத்த செட்டையும் அவர் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று டெய்லர் சாம்பியன் ஆனார்.
5. இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பாராட்டிய இந்தியர்!
உத்தரகாண்டின் பரோலா பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் மெஹ்ரா. இவர் தன்னுடைய வீட்டில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார். பணி முடிந்து வீடு திரும்ப இரவாகி விடுகிறது. ஆனால், மற்றவர்களைப் போன்று வாகனம், பேருந்து வசதிகளை பிரதீப் பயன்படுத்தவில்லை. அதற்கு பதிலாக, பணி முடிந்ததும் இரவில், நொய்டா சாலையில் 10 கி.மீ. தூரம் ஓடியே வீட்டை அடைகிறார். ராணுவத்தில் சேர்வதற்காக தான் ஓடுவதாகவும் காலையில் தினமும் 8 மணிக்கு எழுந்து, பணிக்கு செல்வதற்கு முன் உணவு சமைக்க வேண்டும் என்பதால் காலையில் தன்னால் பயிற்சி மேற்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.
10 கிலோமீட்டர் இவர் ஓடிச் செல்லும் வீடியோ சமூகவலைத்தளங்களில் சமீபத்தில் வைரலானது. இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதீப் மெஹ்ரா ஓடும் வீடியோவை பகிர்ந்து "இன்றைய காலை பொழுதை இது சிறப்பாகியுள்ளது! என்ன ஒரு மனிதர்!" எனப் பதிவிட்டுள்ளார்.