விளையாட்டு

“ஸ்ட்ரைக் ரேட் பிரச்சனைதான்.. ஆனால் அது IPL-ல் மட்டுமே” : ஸ்ரேயாஸ் ஐயர் மீதான விமர்சனம் சரிதானா?

ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்காக ஆடியிருப்பதை விட ஐ.பி.எல் போட்டிகளிலேயே அதிகம் ஆடியிருக்கிறார்.

“ஸ்ட்ரைக் ரேட் பிரச்சனைதான்.. ஆனால் அது IPL-ல் மட்டுமே” : ஸ்ரேயாஸ் ஐயர் மீதான விமர்சனம் சரிதானா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையே டி20 தொடர் நடந்து முடிந்திருக்கிறது. இந்த தொடரை 3-0 என இந்திய அணி முழுமையாக வென்று அசத்தியிருந்தது. இந்திய அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் இந்த மூன்று போட்டிகளிலுமே அரைசதம் அடித்து வெற்றிக்கு காரணமாகியிருந்தார். இளம் வீரரான ஸ்ரேயாஸ் ஐயரின் மீது அவரின் ஸ்ட்ரைக் ரேட்டை முன்வைத்து பலவிதமான விமர்சனங்கள் கூறப்பட்டன. அந்த விமர்சனங்களை போக்கும் வகையிலும் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த தொடரில் ஆடியிருந்தார் என்பதே சிறப்பான விஷயம்.

முதலில் ஸ்ரேயாஸ் ஐயர் மீது ஸ்ட்ரைக் ரேட் சார்ந்து முன்வைக்கப்படும் விமர்சனங்களில் உண்மையிருக்கிறதா என பார்த்துவிடுவோம். ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்காக ஆடியிருப்பதை விட ஐ.பி.எல் போட்டிகளிலேயே அதிகம் ஆடியிருக்கிறார். அதனால் முதலில் அங்கிருந்தே தொடங்கிவிடுவோம்.

2015 முதல் கடந்த 2021 சீசன் வரைக்குமே ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணிக்காக மட்டுமே ஆடியிருக்கிறார். 2015ஆம் ஆண்டைப் பொறுத்தவரை 439 ரன்களை 128.4 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருக்கிறார். இதை படுமோசமான ஸ்ட்ரைக் ரேட் என சொல்லிவிட முடியாது. அடுத்த 2016 சீசனில் ஒரு சில போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தார் என்பதால் அதை கணக்கில் கொள்ள வேண்டியதில்லை. 2017 சீசனில் 338 ரன்களை 139.1 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருக்கிறார். இது நல்ல ரன்விகிதமே. 2018 ஆம் ஆண்டில் 411 ரன்களை 132.6 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருக்கிறார். இதுவும் மோசமில்லை. இதுவரையிலான நான்கு சீசன்களிலுமே ஸ்ரேயாஸின் ஸ்ட்ரைக் ரேட்டில் பெரிய பிரச்சனையில்லை. இதன்பிறகுதான், உன்னிப்பாக கவனிக்க வேண்டியிருக்கிறது. 2019 சீசனில் 463 ரன்களை 119.9 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருக்கிறார். டி20 போட்டிகளில் இது நிச்சயமாக மோசமான ஸ்ட்ரைக் ரேட்தான். 2020 இல் 519 ரன்களை 123.3 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருக்கிறார். இதுவும் மோசம்தான். 2021 சீசனில் முதல் பாதி தொடரில் மட்டும்தான் ஆடியிருந்தார். அதில் 175 ரன்களை 102.3 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருந்தார். இது படுமோசம்.

ஆக, ஐ.பி.எல் ஐ பொறுத்தவரைக்கும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு முதல் 4 சீசன்களின் ஸ்ட்ரைக் ரேட் ஓரளவுக்கு நன்றாகவே இருக்கிறது. ஆனால், அடுத்த 3 சீசன்களின் ஸ்ட்ரைக் ரேட் மோசமாகவே இருக்கிறது.

ஐ.பி.எல்-லை ஒரு ஓரமாக வைத்துவிட்டு சர்வதேச போட்டிகளுக்கு வருவோம். 2017-இல் இந்திய அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் அறிமுகமாகியிருந்தார். அந்த ஆண்டில் 5 இன்னிங்ஸ்களில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 103.8 ஆக இருந்தது. குறைவான போட்டிகளில் ஆடியிருப்பதாலும் நிலையான இடத்திற்காக போராட வேண்டியிருந்ததாலும் இந்த எண்களை ஏற்றுக்கொள்ளலாம். 2019-இல் 7 இன்னிங்ஸ்களில் 143 ரன்களை 145.9 ரன்களை எடுத்திருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட் சிறப்பாக இருக்கிறது. ஆனால், பெரிய இன்னிங்ஸ்களை ஆடியிருக்கவில்லை. 2020 இல் 9 இன்னிங்ஸ்களில் 203 ரன்களை 135.3 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருக்கிறார். 2021 இல் 6 இன்னிங்ஸ்களில் 151 ரன்களை 136 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருக்கிறார். நடப்பு 2022ஆம் ஆண்டில் இதுவரை 4 இன்னிங்ஸ்களில் 225 ரன்களை 170.5 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருக்கிறார். இலங்கைக்கு எதிராக அடித்திருக்கும் ஹாட்ரிக் அரைசதங்களும் அடக்கம். இந்த மூன்று அரைசதங்களில் ஒன்றை 200+ ஸ்ட்ரைக் ரேட்டிலும் மற்ற இரண்டையும் 160+ ஸ்ட்ரைக் ரேட்டிலும் எடுத்திருக்கிறார்.

சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடியிருக்கும் ஸ்ரேயாஸ் ஐயரின் ஸ்ட்ரைக் ரேட்டில் பெரிய பிரச்சனை இருப்பதாகவே தெரியவில்லை. சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டிலேயே ஆடியிருக்கிறார். அதிலும் கடைசியாக இலங்கைக்கு எதிரான தொடரில் அதிரடியாக ஆடி வெளுத்திருக்கிறார். ஆக, ஸ்ட்ரைக் சார்ந்து இந்திய அணிக்காக ஆடும் ஸ்ரேயாஸ் ஐயரை விமர்சிக்க இடமே இல்லை.

அப்படியிருந்தும் அவர் மீது ஏன் தொடர்ந்து ஸ்ட்ரைக் ரேட் சார்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது? காரணம் ஐ.பி.எல்.

மேலேயே பார்த்திருப்போம் ஐ.பி.எல்-இல் ஸ்ரேயாஸின் ஸ்ட்ரைக் ரேட் பயங்கரமாக அடி வாங்கியிருக்கிறது. அதிலும், குறிப்பாக கடைசி 3 சீசன்கள் பயங்கர சொதப்பலாக இருக்கிறது. வலுவான டெல்லி கேப்பிட்டல்ஸின் அண்டர் பெர்ஃபார்மென்ஸிற்கு ஸ்ரேயாஸ் ஐயரின் மெதுவான ஆட்டமும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

ஏன் மெதுவாக ஆடினார்?

ஐ.பி.எல் லிலுமே கடைசி 3 சீசன்களில்தான் ஸ்ரேயாஸ் ஐயரின் ஸ்ட்ரைக் ரேட் பயங்கரமாக அடி வாங்கியிருக்கிறது. அதற்கு முந்தைய சீசன்களில் ஓரளவுக்கு சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டையே வைத்திருக்கிறார். இதில் கவனிக்க வேண்டியது ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருக்கும் கடந்த 3 சீசன்களிலும் அவர் ஆடிய அத்தனை போட்டிகளிலும் அவர்தான் டெல்லி அணிக்கு கேப்டன். அதற்கு முந்தைய சீசன்களில் சாதாரண வீரராக ஆடிய போது ஸ்ரேயாஸிற்கு பெரிய அழுத்தமெல்லாம் இருந்திருக்கவில்லை. தன்னுடைய இயல்பான டி20 ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், கேப்டனாக மாறிய பிறகு கூடுதல் பொறுப்புணர்வு ஒரு கூடுதல் ஜாக்கிரதையுணர்வை கொடுக்கவே மெதுவாக ஆடி ஸ்ட்ரைக் ரேட்டில் கோட்டைவிட்டிருக்கிறார். இதே பிரச்சனை கே.எல்.ராகுலுக்கும் உண்டு. பஞ்சாப் அணிக்காக சாதாரண வீரராக ஆடிய போது அதிரடியாக ஆடியவர், கேப்டன் ஆன பிறகு மெதுவாக அதீத ஜாக்கிரதை உணர்வோடு ஆடி ஸ்ட்ரைக் ரேட்டில் சொதப்பியிருப்பார். ஸ்ரேயாஸ் இந்திய அணிக்காக ஆடும்போது அவர் ஒரு சாதாரண வீரராக மட்டுமே ஆடுவதால் எந்த அழுத்தமுமின்றி நல்ல அதிரடியாக நல்ல ஸ்ட்ரைக் ரேட்டிலும் ஆடுகிறார்.

அடுத்தகட்ட இந்திய கேப்டனுக்கான ரேஸில் ஸ்ரேயாஸ் ஐயரும் இருப்பதால், அந்த அழுத்தத்தையும் தாங்கிக்கொண்டு இதேமாதிரி நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ஸ்கோர் செய்ய அனுபவத்தின் மூலம் கற்று உணர வேண்டும்.

banner

Related Stories

Related Stories