சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 140 வது அமர்வை நடத்துவதற்காக மும்பை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. ஒலிம்பிக்ஸ் சார்ந்து மிக முக்கிய முடிவுகளை எடுக்கும் இந்த அமர்வு இந்தியாவில் கூடவிருப்பது இந்திய விளையாட்டு வரலாற்றில் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.
அடுத்தடுத்த ஒலிம்பிக்ஸ் தொடர்களை எங்கே நடத்தலாம்? ஒலிம்பிக்ஸ் தொடரில் சேர்க்க வேண்டிய மற்றும் நீக்க வேண்டிய போட்டிகள் என்னென்ன? என்பது உட்பட பல முக்கியமான முடிவுகள் இந்த அமர்வுகளிலேயே எடுக்கப்பட்டும். சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் இந்த அமர்வு ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும். சீனாவின் பீஜிங்கில் இந்த ஆண்டிற்கான்ச் அமர்வு நடந்திருந்தது. இதில்தான அடுத்த ஆண்டிற்கான அமர்வை நடத்தும் இடமாக இந்தியாவின் மும்பை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் முன்பாக, இந்தியா சார்பிலான சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் உறுப்பினரான நீதா அம்பானி, இந்திய ஒலிம்பிக்ஸ் சங்கத்தின் தலைவர் நரீந்தர், விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர், 2008 ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா ஆகியோர் மும்பை சார்பில் வாதங்களை முன் வைத்திருந்தனர். இதனை தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மும்பைக்கு ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 1 வாக்கும் கிடைத்தது. இறுதியில் சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் தலைவர் தாமஸ் பேச் அடுத்த அமர்வை மும்பையே நடத்தும் என அறிவித்தார்.
'அதிக இளைஞர்களை கொண்டிருக்கும் இந்தியாவில் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகளை மேம்படுத்துவதற்காக மும்பை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது' என தாமஸ் பேச் கூறியிருந்தார்.
இந்த அமர்வு அடுத்த 2023 ஆம் ஆண்டில் மே மற்றும் ஜுன் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கு முன் இந்த அமர்வு இந்தியாவில் 1983 ஆம் ஆண்டு நடந்திருந்தது. 40 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடக்க இருப்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஒலிம்பிக்ஸை நடத்த வேண்டும் என்கிற இந்தியாவின் கனவு நிறைவேறுவதற்கான முதல்படியாக இது இருக்கும் எனவும் கருதப்படுகிறது.
இந்தியா 2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தது. ஆனால், அந்த ஒலிம்பிக்ஸ் பிரிஸ்பேனுக்கு வழங்கப்பட்டது. இதனால் 2036 ஒலிம்பிக்ஸை இந்தியா டார்கெட் செய்திருக்கிறது. அதிகப்பட்சமாக 2048 க்குள் அதாவது இந்தியாவின் 100 வது சுதந்திர தினத்தின் போதாவது ஒலிம்பிக்ஸை நடத்திவிட வேண்டும் என இந்தியா குறியாக இருக்கிறது.