2022ம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் பெங்களூருவில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் புதிதாக இணைந்த லக்னோ, குஜராத் என 2 அணிகள் உட்பட 10 அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்று தத்தம் அணிகளுக்கான வீரர்களை ஏலத்தில் எடுத்தனர்.
அதில் அதிகளவில் பேசப்பட்டதாக தென்னாப்பிரிக்க வீரரான ஃபாப் டூ ப்ளெசிஸ்ஸை சென்னை அணி ஏலத்தில் எடுக்காததால் பெங்களூர் அணி அவரை 7 கோடி ரூபாய்க்கு தட்டிச் சென்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 10 ஆண்டுகளாக விளையாடியவர் டூ ப்ளெசிஸ். அவரை சென்னை அணியினர் ஏலத்தில் எடுக்காமல் கோட்டை விட்டதும் ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை எழுப்பியிருந்தது. மேலும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களும் பறந்தன.
ஏனெனில், இதுகாறும் சென்னை அணியின் ஓபனராக திறம்படவே செயல்பட்டிருக்கிறார்.
2012ம் ஆண்டு முதல் சென்னைக்காக விளையாடியவர் டூ ப்ளெசிஸ். 2018ம் ஆண்டு டூ ப்ளெசிஸ் அடித்த ரன்கள்தான் சென்னை அணியை இறுதிப்போட்டிக்கே அழைத்துச் சென்றது என்றும் பதிவிட்டு ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை அணியை விட்டு செல்வதை தொடர்ந்து ஃபாப் டூ ப்ளெசிஸ் வீடியோ வெளியிட்டு சென்னை ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
அதில், “சென்னை அணியுடன் பத்தாண்டுகள் இருந்ததற்கு ரசிகர்கள், ஊழியர்கள், நிர்வாகம் மற்றும் வீரர்களுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.
நன்றி சொல்வது எனக்கு மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன். நான் என் நேரத்தை மிகவும் ரசித்திருக்கிறேன். அங்குள்ள அனைவரையும் மிஸ் செய்வேன்” எனக் கூறியுள்ளார்.