இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இதில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. ஏற்கனவே முதல் போட்டியை வென்றிருந்த நிலையில் 2-0 என இந்த தொடரையும் தென்னாப்பிரிக்க அணி வென்றிருக்கிறது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்த நிலையில் ஒருநாள் தொடரையும் இந்திய அணி இழந்திருக்கிறது.
நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டனான கே.எல்.ராகுலே டாஸை வென்றிருந்தார். இந்திய அணியே முதலில் பேட்டிங் செய்திருந்தது.
ஓப்பனர்களான ராகுலும் தவானும் ஓரளவுக்கு நல்ல தொடக்கத்தையே கொடுத்திருந்தனர். முதல் விக்கெட்டிற்கு 63 ரன்களை சேர்த்திருந்தனர். இந்நிலையில், 29 ரன்களில் பார்ட் டைமரான மார்க்ரமின் பந்தில் தவான் அவுட் ஆகியிருந்தார். நம்பர் 3 இல் வந்த விராட் கோலியும் டக் அவுட் ஆகி ஏமாற்றியிருந்தார். நம்பர் 4 இல் ரிஷப் பண்ட் களமிறங்கியிருதார். ராகுல் + ரிஷப் பண்ட் இந்த கூட்டணி மிகச்சிறப்பாக ஆடியது. கே.எல்.ராகுல் டிஃபன்ஸிவ்வாக ரிஷப் பண்ட்டிற்கு செகண்ட் ஃபிடில் ஆட ரிஷப் பண்ட் அதிரடியாக இறங்கி ஆடினார். ஸ்பின்னர்களை வெளுத்தெடுத்தார். இருவரும் சேர்ந்து 115 ரன்களை எடுத்திருந்தனர். கே.எல்.ராகுல் 55 ரன்களில் மகாலாவின் பந்தில் அவுட் ஆக, ரிஷப் பண்ட் அடுத்த ஓவரிலேயே 85 ரன்களில் ஷம்சியின் பந்தில் அவுட் ஆகினார்.
இதன்பிறகு, மிடில் ஆர்டர் வீரர்கள் அடித்தால் இந்திய அணி பெரிய ஸ்கோரை எட்டும் என்ற சூழலில் ஸ்ரேயாஸ் ஐயர் 11 ரன்களிலும் வெங்கடேஷ் ஐயர் 22 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதன்பிறகு அஷ்வின் மற்றும் ஷர்துல் தாகூர் இருவரும் அணியை ஓரளவுக்கு காப்பாற்றினர். கடந்த போட்டியில் அரைசதம் அடித்த ஷர்துல் தாகூர் இந்த போட்டியில் 40 ரன்களை அடித்தார். அஷ்வின் 25 ரன்களை சேர்த்திருந்தார். இதன் விளைவாக 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 287 ரன்களை சேர்த்தது.
தென்னாப்பிரிக்க அணிக்கு டார்கெட் 288. தென்னாப்பிரிக்க அணி எந்த சிரமமும் இன்றி இந்த டார்கெட்டை எட்டியது. ஓப்பனர்களான டீகாக் மற்றும் யானமன் மலான் இருவருமே சிறப்பாக ஆடினார். இருவரும் இணைந்து 22 ஓவர்களில் 132 ரன்களை சேர்த்தனர். டீகாக் க்ரீஸில் இருந்த வரை அவரே அட்டாக் செய்து ஸ்கோரை முன்நகர்த்தி சென்றார். அவர் 78 ரன்களில் அவுட் ஆன உடன் மலான் அட்டாக் செய்ய தொடங்கினார். அவருக்கு உறுதுணையாக பவுமா செகண்ட் ஃபிடில் ஆடினார். மலான் 91 ரன்களில் அவுட் ஆக, உடனே பவுமாவும் அவுட் ஆனார். இதன்பிறகு, கூட்டணி சேர்ந்த வாண்டர் டஸனும் மார்க்ரமும் சிரமமேயின்றி டார்கெட்டை சேஸ் செய்து முடித்தனர். தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் வென்று தொடரையும் வென்றிருக்கிறது.
நடந்து முடிந்திருக்கும் இரண்டு போட்டியிலுமே இந்திய அணியின் மிடில் ஆர்டர்தான் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்திருக்கிறது. மேலும், இந்திய அணியின் பந்துவீச்சும் அவ்வளவு வலுவாக இருந்திருக்கவில்லை. இந்த இரண்டு பிரச்சனைகளும் தீரும்பட்சத்தில்தான் இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றியாவது கிடைக்கும்.