விளையாட்டு

2 வது டெஸ்ட்: அடுத்தடுத்து விழுந்த விக்கெட்.. முதல் நாளிலேயே 202 ரன்னில் இந்தியா ஆல் அவுட்!

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணி.

2 வது டெஸ்ட்: அடுத்தடுத்து விழுந்த விக்கெட்.. முதல் நாளிலேயே 202 ரன்னில் இந்தியா ஆல் அவுட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணி. தன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இளம் தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் மார்கோ யான்சன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

முதுகில் காயம் ஏற்பட்டதால் இந்த டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார் இந்திய கேப்டன் விராட் கோலி. கேப்டன் கோலி இல்லாத நிலையில், ரோஹித் ஷர்மா இடத்தில் துணைக் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் இந்திய அணியை வழிநடத்தினார். கேப்டனாக தன் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ராகுல், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால் இருவரும் ஓரளவு சிறப்பாகவே இன்னிங்ஸைத் தொடங்கினார். குறிப்பாக மயாங்க் அகர்வால் அதிரடியாக விளையாடி அசத்தினார். ராகுலோ மிகவும் நிதானமாக இன்னிங்ஸைக் கட்டமைத்தார். 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்கோ யான்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் அகர்வால். ஃபுல் லென்த்தில் யான்சன் வீசிய பந்தை டிரைவ் செய்ய நினைக்க, அவுட் சைட் எட்ஜாகி கீப்பர் வெர்ய்னிடம் சிக்கியது பந்து. 36 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது இந்தியா.

2 வது டெஸ்ட்: அடுத்தடுத்து விழுந்த விக்கெட்.. முதல் நாளிலேயே 202 ரன்னில் இந்தியா ஆல் அவுட்!

அடுத்து வந்த புஜாரா வெகுநேரம் களத்தில் நிற்கவில்லை. 33 பந்துகளைச் சந்தித்த அவர் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டுவேன் ஒலிவியர் பந்துவீச்சில் பவுமாவிடம் கேட்சானார். ரஹானேவோ முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து கோல்டன் டக் ஆகி வெளியேறினார். 49 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது இந்தியா. ஹனுமா விஹாரி சிறிது நேரம் தாக்குப்பிடித்தாலும், வேன் டெர் டுசன் பிடித்த அற்புத கேட்சால் 20 ரன்களுக்கு வெளியேறினார்.

ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நன்றாக ஒத்துழைத்தது. வாண்டரர்ஸ் ஆடுகளத்தின் பௌன்ஸைப் பயன்படுத்தி யான்சனும் ஒலிவியரும் இந்திய பேட்ஸ்மேன்களைப் பாடாய்ப் படுத்தினர். ராகுல் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினார். கேப்டனாக தன்னுடைய முதல் போட்டியிலேயே அரைசதமும் அடித்தார். ஆனால், 50 அடித்த கையோடு வெளியேறினார் அவர். ரபாடா பிடித்த அட்டகாசமான கேட்ச், அவரை பெவிலியனுக்கு அனுப்பியது.

அடுத்து வந்த ரிசப் பன்ட் 17 ரன்களுக்கு அவுட்டானார். ஷர்துல் தாகுர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இப்படி விக்கெட்டுகள் ஒருபக்கம் போய்க்கொண்டே இருந்தாலும், நம் தமிழக வீரர் அஷ்வின் அட்டகாசமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டார். 50 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து யான்சன் பந்துவீச்சில் வெளியேறினார் அவர். ஷமி 9 ரன்களுக்கும், முகமது சிராஜ் 1 ரன்னுக்கும் அவுட் ஆகினர். பும்ரா 11 பந்துகளுக்கு 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் இந்திய அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

banner

Related Stories

Related Stories