இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் போட்டியின் இரண்டாவது நாளான இன்று பரபரப்பான பல தருணங்கள் அரங்கேறியிருந்தன. குறிப்பாக, நியூசிலாந்து அணியின் இடதுகை ஸ்பின்னரான அஜாஸ் படேல் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் எடுத்து சாதனை செய்திருக்கிறார்.
இந்திய அணி முதல் நாளின் முடிவில் 221-4 என்ற நிலையில் இருந்தது. 4 விக்கெட்டுகளையும் அஜாஸ் படேலே வீழ்த்தியிருந்தார். மயங்க் அகர்வாலும் விருத்திமான் சஹாவும் நாட் அவுட்டாக இருந்தனர். இன்றைய நாளின் தொடக்கத்தில் தனது முதல் ஓவரிலேயே சஹா மற்றும் அஸ்வினை அடுத்தடுத்த ஓவர்களில் அஜாஸ் படேல் வீழ்த்தியிருந்தார். இதன்பிறகு, மயங்க் அகர்வாலும் அக்சர் படேலும் கூட்டணி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக நின்று நல்ல பார்ட்னர்ஷிப் போட்டனர். இந்திய அணியின் ஸ்கோர் 300-ஐ கடந்தது.
மயங்க் அகர்வால்-அக்ஷர் படேல் இந்த கூட்டணியையும் அஜாஸ் படேலே பிரித்தார். 150 ரன்களை எடுத்திருந்த மயங்க் அஜாஸின் பந்தில் போல்டை பறிகொடுத்தார். அரைசதம் கடந்த அக்சர் படேல் அஜாஸின் பந்தில் lbw ஆகியிருந்தார். இந்திய அணி 325 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. 47.5 ஓவர்களை வீசி இந்திய அணியின் அத்தனை பேட்ஸ்மேன்களையும் அஜாஸ் படேலே வீழ்த்தியிருந்தார்.
இதற்கு முன் இங்கிலாந்தின் ஜிம் லேகர், இந்திய அணியின் அனில் கும்ப்ளே ஆகியோர் மட்டுமே ஒரே இன்னிங்ஸில் எதிரணியின் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருக்கின்றனர். இப்போது அஜாஸ் படேலும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். 10 விக்கெட் எடுத்த அஜாஸ் படேலை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் டிராவிட், சிராஜ் ஆகியோர் நியுசிலாந்தின் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு சென்றே வாழ்த்திவிட்டு வந்தனர்.
அஜாஸ் படேல் நியூசிலாந்துக்காக ஆடினாலும் அவர் இந்தியாவில் பிறந்தவரே. எட்டு வயது வரை மும்பையிலேயே இவரது குடும்பம் வசித்திருக்கிறது. தொழில்நிமித்தமாக அவரது தந்தை நியூசிலாந்துக்கு குடிபெயர ஒட்டுமொத்த குடும்பமும் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தது. அங்கேதான் கிரிக்கெட்டின் மீது ஆர்வம் உண்டாகி கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார். முதலில் வேகப்பந்து வீச்சாளராகவே பயிற்சி செய்திருக்கிறார். நியூசிலாந்து அணியில் இடம் கிடைக்காமல் போகவே சுழல்பந்து வீச்சாளராக தன்னை மாற்றிக் கொண்டு மீண்டும் முயற்சி செய்திருக்கிறார். இப்போது நியூசிலாந்து அணியில் இடம் கிடைக்கிறது. ஆசிய மைதானங்களின் நன்றாக வீசவே இந்த இந்திய தொடரிலும் கிடைத்தது. இப்போது வரலாற்று சாதனையை செய்துவிட்டார்.
இந்த சாதனை நிகழ்த்தப்பட்ட பிறகு நியூசிலாந்து பேட்டிங்கை தொடங்கியது. ஆனால், அஜாஸ் படேலின் சாதனையை மறக்கடிக்கும் அளவுக்கு நியூசிலாந்து அணியினர் பேட்டிங் செய்தனர். 62 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அஷ்வின் 4 விக்கெட்டுகளையும் சிராஜ் 3, அக்சர் 2, ஜெயந்த் யாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா 69 ரன்களை எடுத்து விக்கெட்டை விடாமல் இருக்கிறது. மயங்க் அகர்வாலும் புஜாராவுமே ஓப்பனர்களாக இறங்கியிருந்தனர். மயங்க் 38 ரன்களிலும் புஜாரா 29 ரன்களிலும் நாட் அவுட்டாக இருந்தனர்.
இந்திய அணி ஒரு பெரிய ஸ்கோரை எட்டிவிட்டு டிக்ளேர் செய்து நியூசிலாந்தை ஆல் அவுட் எடுத்து வெல்ல வேண்டும். எவ்வளவு விரைவாக வெல்ல முடியுமோ அவ்வளவு விரைவாக வெல்லவே இந்தியா விரும்பும்.