இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மும்பையின் வான்கடே மைதானத்தில் தொடங்கவிருக்கிறது. முதல் போட்டி டிரா ஆகியிருந்த நிலையில் இந்த இரண்டாவது போட்டியை வென்று தொடரை வெல்ல வேண்டும் என்பதில் இரண்டு அணிகளும் உறுதியாக இருக்கின்றனர்.
முதல் டெஸ்ட்டை பொறுத்தவரைக்கும் இந்திய அணி நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டிருந்தது. நியுசிலாந்து அணி போராடி போட்டியை டிரா செய்திருந்தது. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்களான அஷ்வின், ஜடேஜா, அக்சர் படேல் மூவருமே சிறப்பாக செயல்பட்டிருந்தனர். முதல் இன்னிங்ஸில் அக்சரும் இரண்டாவது இன்னிங்ஸில் ஜடேஜாவும் சிறப்பாக வீசியிருந்தனர். அஷ்வின் இரண்டு இன்னிங்ஸிலுமே விதவிதமாக வீசி தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். இவர்கள் இதே ஃபார்மை இரண்டாவது டெஸ்ட்டிலும் தொடர்ந்தாலே போதும்.
வேகப்பந்து வீச்சாளர்களான உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா இருவராலுமே பெரிதாக ஒன்றுமே செய்ய முடியவில்லை. இந்திய மைதானங்கள் வேகத்திற்கு உதவாது என்றாலும் நியுசிலாந்து பௌலர்களான டிம் சவுத்தியும் கைல் ஜேமிசனும் நன்றாகவே வீசியிருந்தனர். எனவே இந்த இரண்டாவது டெஸ்ட்டில் உமேஷ், இஷாந்த் இருவரில் ஒருவர் பென்ச்சில் உட்கார வைக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
பேட்டிங்கை பொறுத்தவரைக்கும் முதல் டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்ஸிலுமே ஸ்ரேயாஸ் ஐயர் மிகச்சிறப்பாக ஆடியிருந்தார். அஷ்வின் இரண்டு இன்னிங்ஸிலுமே கணிசமான பங்களிப்பை செய்திருந்தார். விருத்திமான் சஹா ஒரு நல்ல அரைசதத்தை அடித்திருந்தார். இவர்களை தவிர எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான பேட்ஸ்மேன்கள் பெரிதாக சோபிக்கவில்லை.
குறிப்பாக, ஃபார்ம் அவுட்டில் இருக்கும் ரஹானே கடந்த போட்டியிலும் சொதப்பியிருந்தார். போதும் போதும் என சொல்லுமளவுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்ட பின்னும் பெர்ஃபார்ம் செய்ய முடியாமல் திணறும் ரஹானே நாளைய ப்ளேயிங் லெவனில் இருப்பாரா என்பதே கேள்விக்குறியாகி இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் வழக்கமாக கோலி நம்பர் 4 லும் ரஹானே நம்பர் 5-லும் இறங்குவர்.
முதல் போட்டியில் கோலி ஆடியிருக்கவில்லை என்பதால் ரஹானே நம்பர் 4 இல் இறங்கியிருந்தார். அறிமுக வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் நம்பர் 5 இல் இறங்கியிருந்தார். நாளை நடைபெற போகும் இரண்டாவது போட்டியில் கேப்டன் கோலி அணிக்கு திரும்புகிறார். எனவே அவர் மீண்டும் நம்பர் 4 இல் இறங்குவார். ரஹானே மீண்டும் தனது நம்பர் 5 இடத்திற்கு இறங்குவதில் சிக்கல் ஏற்படும். ஏனெனில், நம்பர் 5இல் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் சதம் மற்றும் அரைசதத்தை அடித்து வலுவாக தனது பெயரை பதித்து விட்டார்.
ஃபார்மிலேயே இல்லாத ரஹானேக்காக நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் ஸ்ரேயாஸ் ஐயரின் மேல் கைவைக்க முடியாது. எனவே ரஹானேவின் இடத்திற்கு சிக்கல் ஏற்படும். பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன் கோலி ரஹானேவுக்கு ஆதரவாக ஒவ்வொரு தொடரின் போதும் பேசிக்கொண்டே இருந்தாலும், இப்போது ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய சிக்கலான சூழலில் சிக்கியிருக்கின்றனர். ரஹானேவுக்காக மயங்க் அகர்வாலை பென்ச்சில் வைத்துவிட்டு கே.எஸ்.பரத்தை ஓப்பனராக்குவார்களா என்பதும் ஒரு கேள்வியாக இருக்கிறது.
ரஹானே விஷயத்தில் கோலி நாளை எடுக்கப்போகும் முடிவு அணியின் எதிர்காலத்தோடு சம்பந்தப்பட்டது. அணிக்கு எது நல்ல முடிவோ அதை கோலி எடுப்பார் என ரசிகர்கள் நம்பி கொண்டிருக்கின்றனர். முதல் போட்டியில் ஆடாத கேப்டன் கோலி இந்த போட்டியில் ஆடவிருப்பது இந்திய அணிக்கு பலமாக அமையும். ஆனால், கோலியும் நீண்ட நாட்களாக சதமடிக்க முடியாமல் திணறியே வருகிறார். கோலி தனது 71 வது சதத்தை இந்த போட்டியில் அடித்து இந்தியாவிற்காக தொடரை வென்று கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.
நியுசிலாந்து அணியை பொறுத்தவரைக்கு வில் யங், டாம் லேதம், வில்லியம்சன் என டாப் ஆர்டர் பேட்டிங் ரொம்பவே பலமாக இருக்கிறது. மிடில் ஆர்டரில் டெய்லர், நிக்கோலஸ் போன்றோர் சோபித்தால் நியுசிலாந்து வலுவான ஸ்கோரை எட்ட முடியும். பௌலிங்கில் கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளராக ஷார்ட் பால் ஸ்பெசலிஸ்ட் நீல் வாக்னர் சேர்க்கப்பட்ட அதிக வாய்ப்பிருக்கிறது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு அங்கம் என்பதால் இந்த தொடரை வென்று இதன் மூலம் கிடைக்கும் புள்ளிகளை பெறுவதற்கே இரண்டு அணிகளும் விரும்பும் என்பதால் போட்டி பரபரவென இருப்பதற்கே அதிக வாய்ப்பிருக்கிறது.